Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!

Manjula Devi
Nov 26, 2024,05:54 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில், 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக உருவாகிறது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. 




இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகத்தில்  நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கக்கடலில் நாளை புயல் உருவாக உள்ள நிலையில் தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு சென்னையில் 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரம் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அதன்படி  கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அண்ணாநகர் டவர், மாதவரம் பால் பண்ணை, வண்ணாந்துரை, பெசன்ட் நகர், வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர் பால்பண்ணை, விருகம்பாக்கம், சி.பி ராமசாமி சாலை, ஆகிய எட்டு ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும்  இயங்கும். மழைக்காலங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சம் 4 பாக்கெட்டுகள் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவையான அளவு பால் பவுடர் மற்றும் யூ ஹச் டி பால் ஆவின் பாலகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கத்தை விட கூடுதலாக ஆவின் பால் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் தேவைப்படும் இடங்களில் தற்காலிக பால் விநியோக விற்பனை நிலையம் அமைத்து பால் மற்றும் பால் பவுடர் விற்பனை செய்யப்படும். பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி பால் விநியோகம் செய்ய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்