கனமழை எதிரொலி: வெள்ள காடான சென்னை விமான நிலையம் .. மூடல்

Meenakshi
Dec 04, 2023,11:57 AM IST

சென்னை: சென்னை விமான நிலையம்  கனமழை மற்றும் பலத்த காற்று காரணத்தினால் தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று  புயலாக மாறி கோரதாண்டம் ஆடிவருகிறது.புயல் சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய  சூறை காற்றும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அநேக இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அனைத்து விதமான போக்குவரத்துகளும் பதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.


இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தின்  ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் மற்றும் தரையிறங்க வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.  மேலும் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசியம் இருந்தால் மட்டும் விமான சேவை பயன்படுத்த வேண்டும். அவசியம் இல்லாவிட்டால் பயணத்தை ரத்து செய்யவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




தற்பொழுது, விமான நிலையத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏதேனும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், உடனடி ஸ்பாட் உதவியைப் பெறவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை விமான சேவைகளை முழுமையாக நிறுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம்  முடிவு செய்துள்ளது.  விமான நிலையத்தில் புயல் தாக்கத்தை எவ்வாறு இருக்கும், அதற்கு என்ன என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் சி வி தீபக் தலைமை அவசர ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலமாக சனிக்கிழமை இரவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.