பிரதமர் நதன்யாகு வீட்டை நோக்கி வந்த டிரோன்.. இஸ்ரேலுக்கு மரண பயத்தைக் காட்டிய லெபனான்!

Su.tha Arivalagan
Oct 19, 2024,06:35 PM IST

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை நோக்கி வந்த டிரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த சமயத்தில் அந்த வீட்டில் பிரதமரோ அல்லது அவரது குடும்பத்தினரோ யாரும் இல்லை. இந்த டிரோன் தாக்குதலால் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையிலான உரசல் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தரப்பில் ஏதாவது பெரிய அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இது பெரும் போராக உருவெடுக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. இஸ்ரேலைக் குறி வைத்து லெபனான், ஹமாஸ், ஈரான் ஆகியவை  தாக்கி வருகின்றன. இஸ்ரேலும் முரட்டுத்தனமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.




நேற்றுதான் ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாகக் கொன்றது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரை லெபனான் குறி வைத்து டிரோன் தாக்குதலை நடத்தியதால் பரபரப்பு கூடியுள்ளது. இஸ்ரேலின் சீசரியா என்ற நகரில் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவின் வீடு உள்ளது. இந்த வீட்டை நோக்கி ஒரு டிரோன் பறந்து வந்தது. ஆனால் வீட்டின் மீது விழாமல் அருகில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது பிரதமரும், அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


லெபனானிலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த டிரோனை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுக்க இயலாமல் போனது தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை இந்த டிரோன் வீட்டில் விழுந்து, பிரதமரும் அவரது குடும்பத்தினரும் இருந்திருந்தால் விபரீதமாக போயிருக்கும் என்பதால் இஸ்ரேல் தரப்பும் அதிர்ச்சியில் உள்ளது. அதேசமயம், மேலும் இரு டிரோன்களை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தாக்கி தகர்த்து விட்டன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்