இது புதுசு.. டிரைவரே கிடையாது.. சென்னை மெட்ரோவுக்கு வரப் போகும் Driverless Metro train!
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. டிரைவர் இல்லாத இந்த மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக இருந்த காரணத்தால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வரிசையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை விமானம் நிலையம் டூ விம்கோ நகர், சென்ட்ரல் டூ பரங்கிமலை என இரண்டு மார்க்கத்திலும் மெட்ரோ ரயில் சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. டிரைவர் இல்லாத 62 மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 3 பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் அடுத்த மாதம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்த மாதம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த மெட்ரோ ரயில்கள் மணிக்கு 80 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இதில் ஆயிரம் பேர் வரை பயணம் செய்யலாம்.
மெட்ரோ ரயில் இடம் பெற்றுள்ள வசதிகள்:
இந்த மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்படுகிறது. இதில் செல்போன் மற்றும் கம்யூட்டர்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் உண்டு.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்