சென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. அக்டோபர் வரை குடிநீர் விநியோகத்துக்கு பிரச்சினை இல்லையாம்!
சென்னை: சென்னையில் அக்டோபர் மாதம் வரை எந்தவித தங்குதடையும் இன்றி குடிநீர் வழங்கப்படும். பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடும் வெயிலில் வாடி வரும் சென்னை மக்களை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கடும் வெயில் தற்போது நிலவி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி தாக்கி வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் என்று மக்கள் பயந்து வருகின்றனர். அதுவும் சென்னை வாசிகளிடையே இந்த தண்ணீர் குறித்த பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஏற்கனவே பெங்களூரு உள்ள பெருநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடியது நினைவிருக்கலாம்.
இந்தநிலை சென்னைக்கும் வந்து விடுமோ என்று மக்களிடையே ஒரு கவலை உள்ளது. காரணம் கடுமையாக அடித்து வரும் வெயில்தான். இந்த நிலையில்தான் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு தரும்ஒரு செய்தியை சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே சென்னையில் அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.