Dreams: காலைல 3 மணில இருந்து 6 மணிக்குள்ள காணும் கனவு பலிக்குமா.. சாஸ்திரம் என்ன சொல்லுது?

Su.tha Arivalagan
Sep 23, 2024,06:16 PM IST

சென்னை: கனவு என்பது மிக மிக சுவாரஸ்யமானது. அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது பலிக்குமா பலிக்காதா என்பதையெல்லாம் தாண்டி கனவு வரும்போது அதை காணும் சுகமே தனிதான். சிலருக்கு டெரர் ஆன கனவுகள் வரும். சிலருக்கு ஜாலியான கனவுகள் வரும். சிலருக்கு துயரச் சம்பவங்கள் கனவாக வரும்.


கனவுகள் விதம் விதமானவைதான்.. ஆனால் அவை பலிக்குமா என்று கேட்டால் இதுவரை அது நிரூபிக்கப்படவில்லை. பெரும்பாலான பேருக்கு தாங்கள் காணும் கனவு நினைவில் இருக்காது. அப்படியே இருந்தாலும் கூட அரைகுறையாகத்தான் அந்தக் கனவானது நினைவில் இருக்கும்.




சரி ஒரு தூக்கத்தின்போது எத்தனை முறை கனவு வரும் தெரியுமா.. சிலருக்கு 3 முதல் 6 முறை கனவு வரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு கனவும் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கலாமாம். சிலருக்கு விதி விலக்காக ஒரே ஒரு கனவு மட்டும் வரும் ஆட்களும் இருக்கிறார்கள்.


நாம் காணும் கனவுகளில் கிட்டத்தட்ட 95 சதவீத கனவுகள் நாம் விழிக்கும்போது அப்படியே மறந்து போய் விடுமாம். சில கனவுகள் மட்டுமே நமது நினைவில் இருக்கும். 


கனவு காண்பது என்பது ஒரு ஃபேன்டசி போலத்தான். ஆனால் அது நமது சிந்திக்கும் திறனையும், நினைவாற்றலை பிரகாசமாக வைத்திருக்கவும் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  கண் பார்வையற்றவர்களுக்குத்தான் அதிக அளவில் கனவு வருகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 


கனவுகள் ஏன் வருகின்றன என்றால்.. அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். நமது தூக்கத்தின் ஒரு பாதிதான் கனவு. கனவு இல்லாமல் யாரும் தூங்கி எழுவதில்லை. கனவு இல்லாவிட்டால் தூக்கமும் கிடையாது. நமது நிறைவேறாத ஆசைகள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள்தான் கனவாக வருகின்றன என்று பொதுவாக சொல்கிறார்கள். அதேசமயம், இதை அறிவியல்பூர்வமாக எப்படிச் சொல்கிறார்கள் என்றால் - நமது மூளைக்கும், தூக்கத்திற்கும் இடையிலான சிக்னல் பரிமாற்றம்தான் கனவு என்று சொல்கிறார்கள்.


 சரி கனவுகள் பலிக்குமா?


பெரும்பாலான கனவுகள் பலிப்பதில்லை. அதிலும் அதிகாலைக் கனவு கண்டால் பலிக்கும் என்று சொல்வார்கள். அதுவும் கூட நிரூபிக்கப்படவில்லை. நாம் நினைப்பதெல்லாம் கனவு என்று சொல்லி விட முடியாது. சில நேரங்களில் நமது கனவில் வந்த சம்பவங்கள் நிஜத்திலும் கூட நடக்கலாம். அப்படி நடப்பது என்பது தற்செயலானதாகத்தான் இருக்குமே தவிர, கனவில் வந்ததால்தான் அது நடந்தது என்று கூற முடியாது.


பகல் கனவு பலிக்காது என்றும் ஒரு சொல் உண்டு. அதுவும் கூட உண்மை இல்லை. இரவில் காணும் கனவே பலிக்காது என்று இருக்கும்போது பகலில் காணும் கனவுக்கும் அதே வாழ்க்கைதானே இருக்க முடியும். அதேசமயம், சில வகை கனவுகளுக்கு பலன்களை சொல்லி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கனவின் மீது நம்பிக்கை வைத்திருப்போர் அந்த பலன்களையும் நம்புகிறார்கள்.


சரி இன்னிக்கு ராத்திரி உங்க கனவுல என்ன வந்துச்சுன்னு நாளைக்கு வந்து சொல்லுங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்