ஜூன் 5ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு.. கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா!
Apr 28, 2023,12:54 PM IST
சென்னை: சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ஜூன் 5ம் தேதி அவர் சென்னை வருகிறார்.
சென்னை கிண்டியில் மிகப் பிரமாண்டமான மருத்துவமனை ரூ. 230 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது. 1000 படுக்கை வசதி கொண்ட இந்த பன்னோக்கு மருத்துவமனை அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அடிக்கல்நாட்டப்பட்டு இரண்டே ஆண்டுகளில் இதை அரசு கட்டி முடித்துள்ளது.
இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அழைப்பிதழைக் கொடுத்தார். அவரது அழைப்பை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் கொடுத்துள்ளார். இதையடுத்து ஜூன் 5ம் தேதி மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார்.
கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இந்த பிரமாண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானம் முடிந்து செப்டம்பர் மாதம்தான் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்கூட்டியே பணிகள் முடிந்ததால் ஜூன் மாதமே திறக்கப்படுகிறது.