Dragon departs ISS: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸின் பூமியை நோக்கி பயணம் தொடங்கியது!
புளோரிடா: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு விண்வெறி வீரர்களுடன் டிராகன் விண்கலமானது, சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு புறப்பட்டது. கிட்டத்தட்ட 17 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் டிராகன் விண்கலமானது அமெரிக்காவின் புளோரிடாவை வந்தடையும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்தனர். 8 நாட்களுக்கு மட்டுமே அவர்களது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, ஹீலியம் கசிவு காரணமாக அவர்கள் பூமிக்குத் திரும்புவது தடைபட்டது. இப்படியாக கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஓடி விட்டது.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், ராஸ்காஸ்மோஸ் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் டிராகன் விண்கலமானது இன்று பூமிக்கு புறப்பட்டது.
இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து டிராகன் விண்கலமானது பூமிக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. திட்டமிட்டபடி எல்லாம் நடப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இனி அடுத்து 17 மணி நேரம் டிராகன் பயணம் செய்து புளோரிடா கடல் பகுதியை நாளை அதிகாலை 3.27 மணியளவில் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பத்திரமாக வந்திறங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாசா செய்துள்ளது.