மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் டாக்டர் தமிழிசை.. தூத்துக்குடியா.. புதுச்சேரியா.. குமரியா??

Su.tha Arivalagan
Mar 18, 2024,12:05 PM IST

சென்னை:  புதுச்சேரி துணை ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராகவும் இருக்கும் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவிகளை ராஜினாமா செய்து விட்டதாக புதுச்சேரி ராஜ்பவனை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டு அரசியலில் மறக்க முடியாத ஒரு தலைவர் டாக்டர் தமிழிசை.  தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர். இவரது காலத்தில்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சரியான அடித்தளம் கிடைத்தது, வலுவாக தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஆழமாக பரவியது.


2019ல் தூத்துக்குடியில் போட்டி




தலைவராக இருந்த நிலையில் கடந்த 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை போட்டியிட்டார். அவருக்கு எதிராக திமுக தரப்பில் கனிமொழி கருணாநிதி நின்றார். கடும் போட்டி மூண்ட நிலையில் கனிமொழி வெற்றி பெற்றார்.


என்னதான் தேர்தலில் தோற்றாலும் கூட  மக்களின் மனதிலிருந்து சற்றும் தாழவில்லை தமிழிசை.. காரணம் அவரை தமிழிசையாக பார்த்ததை விட, ஒரு டாக்டராக பார்த்ததை விட, பாஜக தலைவராக பார்த்ததை விட "நம்ம குமரியார் மகள்"  என்று பாசம் கலந்து பார்ப்பவர்கள்தான் இன்று வரை அதிகம். அந்தப் பாசத்தால்தான் அவர் மக்களின் மனதில் இன்னும் "தமிழக்கா"வாக ஜம்மென்று அமர்ந்திருக்கிறார்.


தூத்துக்குடி தோல்விக்குப் பின்னர் ஆளுநர்




தூத்துக்குடி தோல்விக்குப் பின்னர் தெலங்கானா ஆளுநரானார் தமிழிசை. அதன் பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட  விரும்புவதாக தமிழிசை விருப்பம் தெரிவிக்கவே, அதற்கு பாஜக மேலிடம் இசைவு தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.


அவர் புதுச்சேரியில்தான் போட்டியிடப் போவதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் அதை அவர் மறுத்தார்.. மறுத்தாலும் கூட அதில் வலிந்து மறுப்பு தெரிவிக்கவில்லை. கொஞ்சம் பூசி மெழுகித்தான் அவரது ஸ்டைலில்தான் மறுப்பு வந்தது. இந்த நிலையில் தற்போது டாக்டர் தமிழிசை தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தாமரை மலர்ந்தே தீரும் முழக்கத்திற்குச் சொந்தக்காரர்




இது  உண்மையாக இருக்கும் பட்சத்தில், "தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்" என்ற முழக்கத்தை தமிழிசையின் குரலிலேயே மீண்டும் கேட்கும் வாய்ப்பு உருவாகும். அப்படி முழங்கி முழங்கித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேளை தமிழிசை போட்டியிடுவதாக இருந்தால் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற அலசல்களும் கிளம்பியுள்ளன. அவர் புதுச்சேரியில் போட்டியிடுவார் என்று அழுத்தம் திருத்தமாக நம்பப்படுகிறது.  அப்படி அங்கு போட்டியிடாவிட்டால் அவர் தூத்துக்குடியில் நிற்கலாம். ஆனால் கனிமொழிக்கு அங்கு தற்போது  ஆதரவு பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதால் அது ரிஸ்க்காக அமையலாம்.


எங்கு போட்டியிடுவார்?




அப்படி இல்லாவிட்டால் சொந்த ஊரான கன்னியாகுமரியில் நிற்கலாம்.. ஆனால் பொன் ராதாகிருஷ்ணன் இறங்கி வருவாரா என்று தெரியவில்லை. விஜயதாரணியும் அங்கு சீட்டுக்காக காத்திருப்பதாக பேச்சு உள்ளது. அதுவும் சரிவராவிட்டால் நெல்லைக்கு தமிழிசை போக வாய்ப்புள்ளது. 


எது எப்படி இருந்தாலும் தமிழிசை தேர்தல் களத்திற்கு வந்தாலே போதும், கட்சி களை கட்டி விடும் என்று பாஜகவினர் உற்சாகமாக உள்ளனர்.