5 டிரில்லியன் பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும்.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து
புதுச்சேரி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியா 2024ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற வல்லரசாக உருவெடுக்கும் இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கனவு நனவாக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரி மக்களுக்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மூலமாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமது உடல், பொருள், உயிர் அனைத்தையும் தியாகம் செய்த நமது தேசிய தலைவர்களை இந்த நாளில் இணைத்து போற்றுவது நமது தலையாய கடமை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியா 2024ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற வல்லரசாக உருவெடுக்கும் இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சாதனை இலக்கை அடைவதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாடு நல்லதொரு வளர்ச்சியை எட்ட அது உதவும். நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.