மாதவனுக்கு வாழ்த்து.. ஆதவனை நோக்கி பயணிக்கும் "ஆதித்யா"வுக்கும் தமிழிசை வாழ்த்து!

Su.tha Arivalagan
Sep 02, 2023,03:41 PM IST

சென்னை: ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கும், புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதற்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல நடிகர் மாதவன், தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கும் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆதவனை நோக்கி  பயணிக்கும் ஆதித்யா

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சந்திராயன்-3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி வரலற்றுச் சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த சாதனையாக சூரியனை ஆய்வு செய்வதற்காக “ஆதித்யா எல்-1“ (Aditya L1) செயற்கைக்கோளை இன்று பகல் 11.50-க்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கிறார்கள்.

இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய வரலாற்று தருணம். இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய விஞ்ஞானிகளின் ஆதித்யா எல்-1 திட்டம் முழுமையான வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், இந்திய விஞ்ஞானிகளை சாதனைகளை நேரடியாகச் சென்று பாராட்டி ஊக்கமும் ஆதரவும் அளித்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

மாதவனுக்கு வாழ்த்து

இன்னொரு அறிக்கையில் நடிகர் மாதவனை வாழ்த்தியுள்ளார் டாக்டர் தமிழிசை.. அதில், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்  மாதவன், தேசியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாகக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாதவன் அவர்களை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய தகவல் & தொலைத்தொடர்பு அமைச்சர் அனுராக் தாகூர்க்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

திரைத்துறையில் மாதவனுக்கு இருக்கும் பரந்துபட்ட அனுபவம் தேசியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வளமை சேர்த்து ஆராக்கியமான வளர்ச்சியைக் கொண்டு வரும் என்றும் இந்த நிறுவனத்தை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன்.

மாதவன் இயக்கி நடித்துள்ள "ராக்கெட்ரி - த நம்பி எஃபெக்ட்" திரைப்படம் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.