"திண்டாடும் திராவிட மாடல்".. ஆவேசமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்..  பதிலடி கொடுத்த சேகர்பாபு!

Su.tha Arivalagan
Dec 25, 2023,05:43 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை வெள்ளத்தில் தமிழ்நாடு அரசு தோல்வி அடைந்து விட்டது. திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறியுள்ளது.  மாநில அரசு வெள்ள நிலையைக் கையாளுவதில் தோல்வி அடைந்து விட்டது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். 

அதற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். டாக்டர் தமிழிசை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருக்கிறார்.  அந்த வேலையை மட்டும் பார்த்தால் போதும்.. தமிழ்நாட்டு அரசியலில் அவருக்கு ஏற்கனவே தூத்துக்குடி மக்கள் சரியான பாடம் கற்பித்து விட்டனர் என்று கூறியுள்ளார் பி.கே.சேகர்பாபு.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் சமீபத்தில் கன மழையும், பெரு வெள்ளமும் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது.. இதிலிருந்து இப்போதுதான் மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.



இந்த நிலையில் இன்று தூத்துக்குடிக்கு வந்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டார். மக்களையும் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திராவிட மாடல் என்று சொல்கிறார்கள்.. இங்கு அது திண்டாடும் மாடலாக மாறியுள்ளது.  மிக கன மழை வரப் போவதாக முன்கூட்டியே வானிலை மையம் சொல்லியும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை நான் நேரடியாகவே கேட்கிறேன்.. மக்கள் இங்கே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, 18ம் தேதி  கோவையில் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சி தேவைதானா.. அதை நடத்தியிருக்க வேண்டுமா.. மக்களைத்தானே அவர் சந்தித்திருக்க வேண்டும். அன்றும் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. டெல்லி போய் விட்டார் என்றார்கள். ஆனால் கூட்டணி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்காமல் பிரதமரை மட்டும் பார்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும். அவர் அப்படியா செய்தார் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில்




அவரது இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று கிளாம்பேக்கம் பேருந்து நிலையத்தைப் பார்வையிட வந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்துள்ளார். அவரிடம் டாக்டர் தமிழிசையின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,  அவர் பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர். அந்த வேலையை மட்டும் அவரை பார்க்கச் சொல்லுங்க. அவருடைய எதிர்காலத் திட்டம் என்பது தமிழ்நாட்டில் எம்பி தேர்தலில் போட்டியிடுவது. அதற்கு ஏற்கனவே தூத்துக்குடி மக்கள் பரிசு கொடுத்து விட்டார்கள். மீண்டும் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியைத்தான் பரிசாக அளிப்பார்கள். எனவே அவர் தனது வேலையை மட்டும் பார்த்தால் சரியாக இருக்கும் என்றார் சேகர்பாபு.