உதயநிதி ஸ்டாலின் போட்ட "அநாவசிய சத்தம்".. டாக்டர் தமிழிசை காட்டம்!

Meenakshi
Sep 23, 2023,05:45 PM IST

கோயம்புத்தூர்: சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அதற்கான விளைவுகளை சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமாக சத்தம் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும் என்று தெலங்கானாஆளுநரும் , புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.


டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பலவேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்தார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் குறித்த கேள்வி, உதயநிதி ஸ்டாலின் சனாதன பேச்சு குறித்த கேள்வி, தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கூறியது குறித்து கேட்ட கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்தார்.



பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி. இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.


உயர்கல்வி மருந்துவப்படிப்பில் ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சன்டைல் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு. ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது.  மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 


கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும். தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது. 


சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமாக சத்தம் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன் மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்? நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்? இதற்கு முன்பு எப்போதாவது இப்படி நடந்ததா?. இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா? என நீங்கள் சொல்லுங்கள். அவர் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.


நாடாளுமன்றத்தில் இன்னொரு எம்.பி குறித்து, பாஜக எம்.பி. பேசியது தவறு தான். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சியும் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்திலேயே அதைக்  கண்டித்து வருத்தமும் வெளியிட்டுள்ளா். 


நாடாளுமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது, அவர் அழைக்கப்படுவார். நான் கேட்கிறேன், இன்று ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள், அவர் தேர்தலில் போட்டியிட்ட போது ஏன் ஆதரிக்கவில்லை? பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும். இன்று இவ்வளவு பேசும் நீங்கள் ஒட்டு போட்டு அவரை ஏன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க முன்வரவில்லை. அவர் ஜனாதிபதியாக பிரதமர் தான் காரணம் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.