நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா.. டாக்டர் தமிழிசை சொல்லும் விளக்கம்!

Meenakshi
Apr 08, 2024,05:37 PM IST

சென்னை: மக்களுடன் இருக்கவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன் என்று தென் சென்னை  பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் தீவிரமடைந்துள்ளது. கடும் வெயிலையும்  பொருட்படுத்தாது வீதி வீதியாக சென்று வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பிரச்சாரத்திற்கு மத்தியில் அளித்த ஒரு பேட்டியின்போது கூறியதாவது:


ஆளுநராக இருந்த நான் உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன். அதிகமான காவலர்களோடு அதிகமான பணியில் உயர் நிலையில் இருந்த நான் தெருவுக்கு இறங்கி வந்திருக்கின்றேன். யாருக்காக,  மக்களுக்காக. 15 வருடம் கூட நான் ஆளுநராக இருக்கலாம். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. மக்களுக்காக, அவர்களோடு இணைந்து, அவர்களோடு பேசி, பழகி, அவர்களோடு உட்கார்ந்து, அவர்களோடு சாப்பிட்டு அவர்களோடு இருந்து அவர்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கின்றேன்.




மக்கள் அபரிமிதமான ஆதரவை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாங்க பலமாக இருக்கும் போது எதிர்கட்சிகள் எதிர்த்து பேசினாலும், ஆதரித்து பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு மரியாதைக்குரிய பாரத பிரதமர் இருக்காரு. பிரதமர் வேட்பாளராகவும் இருக்காரு. அவர்களால் பாரத பிரதமர் வேட்பாளரை சொல்ல முடியாது. அதே மாதிரி எங்களால் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியும். அவர்கள் குற்றச்சாட்டுகளைச் சொல்லி மட்டும் தான் ஓட்டு கேட்க முடியும். அதனால், நாங்கள் எங்கள் திட்டங்களை சொல்லி வாக்கு கேட்போம். ஆதலால் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்காங்க. 


பிரதமரின் வருகை மிக்க பலமாகவும், பக்க பலமாகவும் இருக்கிறது.  தென்சென்னை மக்களை பார்ப்பதற்கு பிரதமர் ஆவலாக இருக்கிறார். நிச்சயமாக இது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை பொய் அறிக்கை. நீட்டை நாங்கள் வந்த உடனே நீக்குவோம் என்று சொன்னார்கள் திராவிட முன்னேற்ற கழகத்தனர். ஆனால் நீக்க முடியலை. மற்றவர்களிடம் லட்சம் கையெழுத்து வாங்குவோம்னு சொன்னாங்க. அதுவும் செய்ய முடியல. 


30 சதவீதம் நம் மாணவர்கள் பல மாநிலங்களில் படிக்கின்றனர். அந்த வாய்ப்பு எல்லாம் குறைந்து போகும். நீட்டை பற்றி தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் நீட்டை அக்சப்ட்  பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இவர்கள் நீட்டை பத்தி பேசினாலும், பேசாவிட்டாலும் மக்கள் அதைப்பற்றி கவலை கொள்ள மாட்டாரகள்


.எங்கள் கூட்டணி பலமான கூட்டணி தான். பாமக, தமாக, சகோதரர் தினகரன், சகோதரர் ஓபிஎஸ் அவர்கள் இருக்கிறார்கள். ஆதலால் 8, 9  கட்சிகளின் கூட்டணியோடு நாங்கள் பலமாக தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.