நடிகர் விஜய் திராவிட சாயலில் பயணிப்பதை போல் தெரிகிறதே.. டாக்டர் தமிழிசைக்கு வந்த டவுட்!

Meenakshi
Sep 17, 2024,05:05 PM IST

சென்னை: நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதை போல் தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சித் தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில்தான் வர வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சி தலைமையகத்தில் பிரதமரின் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். 




அப்போது அவர் பேசுகையில், தமிழக பாஜக மட்டும் அல்லாமல் தமிழக மக்கள் சார்பிலும் மூன்றாவது முறையாக இந்தியாவை வலிமையாக வழி நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். அதேபோல் 100 நாட்களைக் கடந்து சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதற்கு நம் பிரதமருக்கு வாழ்த்துக்கள்.


நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பது போல் தெரிகிறது. திராவிட சாயலில் இன்னொரு கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் தான் கட்சிகள் இனி இங்கு வரவேண்டும். விஜய் திராவிட கட்சிகள் பாணியில் பயணிக்காமல் வேறு பாணியில் பயணிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் அப்படித்தான் என காட்டிவிட்டார். 


விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததும், இரு மொழிக் கொள்கையை ஆதரிப்பதும் என திராவிட கட்சிகளின் பாணியில் பயணிக்கிறார். திமுக பாதையில் விஜய் திராவிட சாயலை பூசிக்கொண்டார். சாயம் வெளுக்கிறதா? அல்லது வேறொரு சாயத்தை பூசி கொள்வாரா? என்பது போகப் போக தான் தெரியும்.


விஜய்யின் திரைப்படங்கள் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியாகி லாபம் பார்க்க வேண்டும். ஆனால், மக்களுக்கு படிப்பிற்கு வளர்ச்சிக்கு பல மொழி தேவையில்லை என்று இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார். மேலும் அவரின் ஒரு திரைப்படத்தை திரையிட விடவில்லை. கட்சியின் மாநாட்டை நடத்த  அனுமதிக்கவில்லை. அவர் தேசிய பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம்.ஆனால் திராவிட சாயத்தை பூசிக்கொள்வது விஜய்க்கு நல்லது அல்ல என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்