தாமரை.. வீடு வீடாக மலரத்தான் போகிறது.. அலறத்தான் போகிறீர்கள்.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

Meenakshi
Nov 07, 2024,06:28 PM IST

சென்னை: அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள், தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.. என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு பதிலளித்துள்ளார்.


சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் ரூ.12.60 கோடி மதிப்பில்  ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவின் பணிகளை அமைச்சர் சேகர்பாபு  நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பூங்காவில் இதுவரை செய்யப்பட்ட பணிகள் மற்றும் இனிமேல் செய்யப்பட உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை  பூக்களைப் பார்த்து, குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.




இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிரித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை  செளந்தரராஜன் வெகுண்டு, அமைச்சர் சேகர்பாபுவிற்கு பதில் அளிக்கும் விதமாக எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 


பூங்காவில், குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது என ஆவேசப்பட்டு இருக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்...


குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே.. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்..


அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள், தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்..


கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர, மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்.. இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்.. என்று தனது பாணியில் தமிழில் தெறிக்க விட்டுள்ளார் தமிழிசை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்