"வயலும் வாழ்வும்.. காண்போம் கற்போம்".. மறக்க முடியுமா.. பிளாஷ்பேக்குக்குப் போன டாக்டர் தமிழிசை!
சென்னை: டிடி அதாவது தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.. 90ஸ் கிட்ஸுக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய டிடி பொதிகை தற்போது டிடி தமிழ் ஆக பெயர் மாறியுள்ளது + கலரும் மாறியுள்ளது.
டிடி பொதிகையின் பல நிகழ்ச்சிகள் டிரென்ட் செட்டராக அமைந்தன. இன்றைக்கு பாடாய்ப்படுத்தி வரும் மெகா சீரியல்களின் துயரத்தை அனுபவித்தவர்களுக்கு அன்றைய டிடி பொதிகை பெரிய சொர்க்கமாக இருந்தது. செவ்வாய்க்கிழமை நாடகத்தையெல்லாம் மறக்க முடியுமா..வாரம் ஒரு நாள் மட்டும் சினிமாப் பாடல்களை ஒளிபரப்பும் அந்த ஒளியும் ஒலியும் மறக்க முடியுமா.. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகாலாம். தற்போது அந்த டிடியின் பெயர் மாறியுள்ளது.
டிடி பொதிகை சானலின் பெயர் மாறியிருப்பது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியை புதுப்பொலிவுடன் டிடி தமிழ் என்ற பெயரில் தொடங்கி வைத்த
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொலைக்காட்சிகளின் முன்னோடியான தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உழவுக்கு உயிரூட்டிய "வயலும் வாழ்வும்" கல்விக்கு வழிகாட்டிய
"காண்போம் கற்போம்" மங்கையரைப் போற்றிய "மங்கையர் சோலை", நான் பங்கேற்று பல மாதங்கள் நடத்திய "மகளிர் பஞ்சாயத்து" மற்றும் "மருத்துவ விழிப்புணர்வு" நிகழ்ச்சிகள் இன்றளவும் என் மனதில் நிழலாடுகிறது.
இதுபோன்ற தரமான நிகழ்ச்சிகளை வழங்கிய தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி
டிடி தமிழ் என்ற பெயரில் மீண்டும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஆரம்பித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
டிடிதமிழ் என்ற பெயர் மாற்றத்தை வரவேற்கிறோம்..... வாழ்க... வளர்க... வெல்க என்று டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.