டெல்லி செல்கிறார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்னாவாக இருக்கும்?

Meenakshi
Dec 31, 2024,01:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு விதமான பரபரப்பான அரசியல் சூழல்  நிலவி வரும் நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் சந்திக்கிறார்.


அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அமித் ஷா அழைத்ததன் பேரில் டெல்லி சென்று தமிழிசை செளந்தர்ராஜன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக டெல்லி புறப்பட்டுச் சென்ற டாக்டர் தமிழிசை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பத்து நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு மாநில தலைவர் தேர்வுக்காக சிறப்பு அதிகாரிகள் இருப்பார்கள். நான் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கான அதிகாரி என்பதால் அது தொடர்பாக டெல்லி செல்கிறேன். 




கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து  தமிழக அரசியல் சூழல் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து பேச உள்ளேன். பெண்களுக்கு நடக்கும் பாதிப்புகள் குறித்தும் பேச உள்ளேன். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் முன்னேற்றத்திற்கு முழு பொறுப்பு திமுகவினர் தான் என்பது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பாஜக ஆளும் மஹாராஷ்டிராவில் பெண்களை லட்சாதிபதி ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.


ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக்கால் பெண்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள், டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறி தான் திமுகவினர் ஆட்சிக்கு வந்தனர். எந்த வாக்குறுதியையும் சரியாக நிறைவேற்றாமல் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பெண்களின் நிலை மோசமாகவே இருக்கிறது. மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சென்று பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மத்திய அரசு ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.


திருமாவளவன் மீண்டும் மீண்டும் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் படத்துவதை விட அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக போராட்டங்களை முன்னெடுக்கலாம். தமிழகத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்கும் இடத்தில் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் வலிமையான எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்