மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூட் போட்டதே மோடிதான்.. டாக்டர் தமிழிசை பலே!

Su.tha Arivalagan
Sep 15, 2023,10:47 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை, மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தோடு ஒப்பிட்டு டிவீட் போட்டுள்ளார் தெலங்கானா துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்திருப்பது மகளிருக்கு அரசாங்கமே ரூ. 1000 மாதந்தோறும் உரிமைத் தொகை தரும் திட்டமாகும்.. அதாவது தமிழ்நாடு அரசு மகளிருக்கு பணம் வழங்குகிறது. ஜன் தன் திட்டமானது, மினிமம் பேலன்ஸ் இல்லாமல் மக்கள் தங்களது சொந்தப் பணத்தைப் போட்டு தொடங்கும் வங்கிக் கணக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. 



கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 1.06  கோடி பெண்களுக்கு தமிழ்நாடு அரசு மாதந்தோறும் இத்திட்டத்தின் கீழ் ரூ. 1000 வழங்கவுள்ளது. இதை அவர்களது வங்கிக் கணக்கில் அரசே சேர்த்து விடும்.

இந்தத் திட்டமானது பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய திட்டமாக பலரும் வரவேற்றுள்ளனர். டாக்டர் தமிழிசையும் இதை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் எல்லா உரிமையும், உரிமைத்தொகையும் கிடைத்தால் மகிழ்ச்சியே....

தமிழகத்தில் உரிமைத்தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலைநோக்குப் பார்வையுடன் அன்றே  #ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான்..

மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் தான் முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டுமென்று  ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

ஜன்தன் வங்கிக் கணக்குகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய, மாநில அரசின் மானியங்கள் நேரடியாக  பரிமாற்றம் செய்யப்படுகிறது.  மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம்.

பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 56% பெண்கள் ஜன் தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர். கொரானா தொற்று காலத்தில் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதம் மத்திய அரசு 500 ரூபாய் உதவித்தொகை அளித்தது.

முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று அரசு மானியங்களை பெற்ற நாம் இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுவது இதுவே டிஜிட்டல் இந்தியா என்று கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.

பாஜகவினர் கூட இன்னும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக இப்படி ஒரு விளக்கத்தை அளிக்காத நிலையில் டாக்டர் தமிழிசை முந்திக் கொண்டு சூப்பரான விளக்கம் அளித்து அசத்தியுள்ளார்.