மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Nov 23, 2024,05:38 PM IST
சென்னை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னையில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 20ம் தேதி ஓரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல ஜார்க்கண்டில் உள்ள 81 தொகுதிகளுக்கும் நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 220 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களிலும், மற்ற கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மகாராஜ்டிராவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 145 ஆகும். இதில், பாஜக 127 இடங்களில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 56 தொகுதிகளிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை தி.நகர் கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொண்டர்களோடு சேர்ந்து படு சந்தோஷமாக பட்டாசு வெடித்தார். சேலையை வரிந்து கண்டிக்கொண்டு வெடி வெடித்தும், லட்டு, ஜிலேபி போன்ற இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார். அவரது முகமே உற்சாகத்தில் பொங்கி வழிந்தது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை பேசுகையில், தமிழக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஒட்டு மொத்த பாரத தேசத்தினர் இந்தியா கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். 2026 தமிழ்நாடு தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்பதை இன்றே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இன்று எப்படி மகாராஷ்டிராவின் வெற்றியை கொண்டாடுகிறோமோ, அதே போல 2026 தமிழகத்தில் பாஜக கூட்டணியில் வெற்றியை கொண்டாடுவோம் என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்