ஈசிஜியிலும் கண்டுபிடிக்க முடியாத நெஞ்சு வலி.. நா.த.க. செய்தித் தொடர்பாளர் பகீர் பதிவு!
சென்னை: ஈசிஜி எடுத்தும் நெஞ்சு வலியைக் கண்டிபிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது அதை ஏன் மாரடைப்பை கண்டுபிடிக்கும் முதல் சிகிச்சை முறையாக மருத்துவர்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் விளக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சே. பாக்கியராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஒரு உருக்கமான பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேற்று மாலை வலது தோள்பட்டை வலி என்று சொன்ன எனது சித்தப்பாவை உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறான் என் தம்பி. ECG எடுத்து பார்த்த மருத்துவர் நெஞ்சு வலி இருப்பதாக அறிகுறி இல்லை என மாத்திரை மட்டும் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் வலி வரவே இன்னொரு இதயநோய் மருத்துவரை பார்த்திருக்கிறார்கள் அவரும் ECG எடுத்துவிட்டு எதும் அறிகுறி இல்லை என்றிருக்கிறார். ஆனால் வீட்டுக்கு வந்து 1 மணி நினைவு தப்பிவிட்டது. மீண்டும் மருத்துவமனைக்கு சென்றால் உயிர் பிரிந்து விட்டது என்றிருக்கிறார்கள்.
நெஞ்சு வலியை கண்டறிய முடியாத ECGயை ஏன் மருத்துவர்கள் முதல் கண்டறியும் சிகிச்சையாக வைக்கிறார்கள்? ECGக்கு அடுத்தபடியாக செய்ய வேண்டிய identification mechanism என்ன? இப்படியான நேரங்களில் Multi Speciality மருத்துவமனை செல்வது தான் தீர்வா? மருத்துவர்கள் யாரேனும் விளக்கம் தாருங்கள் என்று அவர் கேட்டுள்ளார்.
ஈசிஜி மட்டும் போதாது - டாக்டர் விளக்கம்
இதற்கு டாக்டர் அபிராம் கிருஷ்ணன் என்பவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இருதய இரத்த ஓட்டம் நொடிக்கு நொடி மாறக்கூடியது,ECG இல் சில சமயங்களில் தப்பிவிடும், இதற்கு அடுத்தகட்ட சோதனைகள் ECHO அல்லது ஆஞ்சியோகிராபி செய்து பார்க்கலாம். positive family history அதாவது குடும்பத்தில், இரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கு இருதய நோய் இருப்பின் நோயாளி தாமாக முன் வந்து இந்த சோதனைகள் செய்து கொள்ளவேண்டும்.
மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக அடுத்த கட்ட சோதனைகள் செய்து கொள்ளவேண்டும். மருத்துவர்கள் பெரும்பாலும் இதை அறிவுறுத்துவார்கள் ஆனால் இது சற்று விலை உயர்வு என்பதால் நோயாளிகள் அதை செய்துகொள்ள தயங்குவார்கள். அதை மீறி மருத்துவர்கள் அறிவுறுத்தி அதை செய்து அதில் ஏதும் இல்லை எனில் மருத்துவரை குறை சொல்கிறார்கள்.
ECG ஒரு சிறந்த தொழில்நுட்பம். இருப்பினும் நான் குறிப்பிட்ட அந்த வரையறைக்குள் நோயாளி வருவாரெனில் ECHO ஆஞ்சியோகிராபி தாமாக முன்வந்து செய்து கொள்ளவது நன்று என்று விளக்கியுள்ளார்.
எந்த நோயாக இருந்தாலும் முதல் கட்ட சிகிச்சை முறையில் திருப்தி இல்லை அல்லது சந்தேகம் இருந்தால் நாமாகவே முன்வந்து அடுத்த கட்ட கண்டுபிடிப்பு முறைகளுக்குச் செல்வதை நாமும் பழக்கிக் கொள்வது நல்லதுதான்.