அன்புமணியுடன் திடீர் மோதல்.. பேச்சைக் கேட்காட்டி வெளியேறி விடு.. கொந்தளித்த டாக்டர் ராமதாஸ்!

Meenakshi
Dec 28, 2024,06:50 PM IST

சென்னை: புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்ததால் பாமகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்  விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


 4 மாதங்களே ஆன முகுந்தனுக்கு பதவி




பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது, முகுந்தன் என்பவரை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பதாக அறிவித்தார்.  அப்போது டாக்டர் ராமதாஸுக்கு அருகே அமர்ந்திருந்த அன்புணி ராமதாஸ் குறுக்கிட்டு மைக்கை கையில் எடுத்து, கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகுந்தனுக்கு பதவியா? அவருக்கு எல்லாம் என்ன அனுபவம் இருக்கிறது. வேறு ஏதாவது பதவி கொடுங்கள். நல்ல அனுபவசாலிகளுக்கு இந்த பதவியை கொடுங்கள். நல்ல அனுபவசாலிக்கு கொடுக்க வேண்டிய பதவியை இவருக்கு கொடுப்பதா? என மேடையிலேயே பகிரங்கமாக எதிர்த்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.


டாக்டர் ராமதாஸின் கோபம்




இதனை சற்றும் எதிர்பார்க்காத டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகி விட்டார். இது நான் உருவாக்கிய கட்சி. இங்கு நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும். நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும்.நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்ட போங்க. 


யாரும் என் பேச்சை கேட்க வில்லை என்றால் இங்கே இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்டு போகட்டும். 


சரினா சரி இல்லைன்னா போ என்று கூறியதுடன் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் முகுந்தன் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுகிறார். எல்லாரும் கைதட்டுங்கப்பா என்று  பேசியதால் பரபரப்பு கூடியது.


அன்புமணி ராமதாஸின் கோபம்




அப்போதும் விடாத டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனக்குள் அதிகரித்த கோபத்தைக் கட்டுப்படுத்த வேகமாக கால்களை ஆட்டியபடியே அமர்ந்திருந்தார். பின்னர் கையில் இருந்த மைக்கை தூக்கி டேபிளில் வீசினார். அதை கெளரவத் தலைவர் ஜி.கே.மணி வேகமாக வந்து எடுத்து வைத்துக் கொண்டார்.


பிறகு எழுந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன். அங்கே என்னை வந்து பார்க்கலாம் என கூறி அவரது செல்போன் எண்ணை மேடையிலேயே கூறினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது . 


பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொண்டர்கள் இரு குழுக்களாக பிரிந்து கோஷங்களை எழுப்பினர். மேலும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் ராமதாஸ் காரை செல்ல விடாமல் வாகனத்தை 10 நிமிடம் மறித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


வாகனத்தை அன்புமணி ஆதரவாளர்கள் மறித்ததால் டாக்டர் ராமதாஸின் கார் செல்ல முடியாமல் நின்றது. பின்னர் கார் புறப்பட்டுச் சென்றது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடையே பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், நான் சென்னைக்குச் செல்கிறேன். யாரும் என்னைப் பின் தொடர்நது வர வேண்டாம். ஊர்களுக்குச் செல்லுங்கள் என்று கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.


இந்த திடீர் மோதல் காரணமாக செய்து வைத்த சாப்பாட்டை பாதிப் பேர் கூட சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. உணவும் வீணானது. அந்த இடமும் வெறிச்சோடி சோபையிழந்து காணப்பட்டது.


டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட முகுந்தன், டாக்டர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் என்று கூறப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்