PG Neet Zero Percentile... "பைத்தியக்காரத்தனம்".. கிருஷ்ணசாமியே டென்சனாயிட்டாரே!
சென்னை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவரும், தீவிர பாஜக ஆதரவு தலைவருமான , புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பிஜி நீட் மாணவர் சேர்க்கைக்கு ஜீரோ சதவீத தகுதி அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் பைத்தியக்காரத்தனம் என்றும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். மத்திய சுகாதாரத் துறையை அவர் கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
முதுநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கான மூன்றாவது கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ’0’ percentile இருந்தால் போதும் என்ற 21 ஆம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரத்தனமான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சக முடிவின் பேரில் தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை எடுத்த இந்த முடிவை ’பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இம்முடிவு யாருடைய அறிவுரையின் பேரில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், கோடான கோடி மக்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிற்கு தகுதி பெற வேண்டிய முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் அல்லது அதற்குக் கீழும் பெற்றாலும் முதுநிலை பட்ட படிப்பிற்கான இடத்தைப் பெற்று விடலாம் என்ற முடிவு எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.
இந்த அறிவிப்பைக் கேட்டது முதல் இந்தியாவெங்கும் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களுடைய மனம் நொடிந்து போய் உள்ளது. இளநிலை மருத்துவர்களுக்கு நீட் தேர்வு தமிழகத்தில் வந்தபொழுது ஆதரித்த நமக்கே மிகுந்த மன வலியைத் தருகிறது. மத்திய அரசின் இந்த முடிவு மிக மிகத் தவறானது. பிரதமர் மோடி அவர்கள் தலையிட்டு இந்த அறிவிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்தியா முழுமைக்கும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் ஏறக்குறைய 44,000 ஆயிரம் MD, MS, OG உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகள் உண்டு. அரசுக் கல்லூரிகள் மற்றும் பிரசித்தி பெற்ற சில தனியார் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. இரண்டாவது சுற்று முடிந்த பிறகும் குறிப்பாக சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் தகுதி வாய்ந்தவர்கள் நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்றும் கூட அந்த இடங்களை நிரப்ப முன் வரவில்லை. காரணம் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் 30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலும் இருப்பதும், பல மருத்துவ கல்லூரிகளில் எவ்விதமான வசதியுமின்றி இளநிலை மருத்துவம் கற்றுக் கொடுப்பதற்கே தகுதியற்ற நிறுவனங்களாக இருப்பதாலும் ஆகும். இதன் காரணமாகவே சுயநிதி மருத்துவ கல்லூரி இடங்கள் காலியாக உள்ளன.
அரசினுடைய மருத்துவ கல்லூரிகளிலும் NON CLINICAL COURSES என்று அழைக்கப்படக்கூடிய Anatomy, Physiology, Biochemistry போன்ற படிப்புகளுக்கான இடங்கள் கூட காலியாக இருப்பதுண்டு. அரசு கல்லூரிகளுக்கே அந்த நிலை என்றால் தரமற்ற சுயநிதி கல்லூரிகள் பற்றி பேசவே தேவையில்லை. இதுவே பல வருடங்களாக ஒரு வழக்கமாக இருக்கும் பட்சத்தில் அரசு அதற்கு தீர்வு காண ஒரு விஞ்ஞான பூர்வமான நடைமுறையைக் கையாண்டிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க ஒரு தவறான நடைமுறைக்கு வழிவகுத்துள்ளார்கள்.
ஒரு சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்கின்ற பொழுதே அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய உண்மையான உள்/வெளி நோயாளிகளின் எண்ணிக்கை, அங்குள்ள படுக்கைகள் நிரப்பக்கூடிய சதவிகிதம் ஆகியவற்றை முறையாகக் கணக்கில் கொண்டு சீட்டுகளின் எண்ணிக்கையைக் கொடுக்காமல் அரசியல் தலையீடுகள், அளவற்ற முறைகேடுகள், லஞ்சம் ஆகியவற்றின் காரணமாக சீட்டுகளின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வழங்கப்பட்டு விடுகின்றன அல்லது அந்த நிறுவனத்தால் முன்கூட்டியே அதிக இடங்களை வாங்கி வைத்துக் கொள்ள முடிகிறது.
உதாரணத்திற்கு 20 மகப்பேறு மருத்துவ மாணவர்கள் முதலாமாண்டு சேருகிறார்கள் என்று சொன்னால், குறைந்தது அந்த மருத்துவமனைக்கு 100 முதல் 200 கர்ப்பிணி பெண்கள் வெளி நோயாளியாக வர வேண்டும்; குறைந்தது 20 முதல் 50 பிரசவங்கள் தினமும் நடைபெற வேண்டும். ஆனால், 20 கர்ப்பிணி பெண்கள் கூட வராத ஒரு மருத்துவமனைக்கு 20 எம்.டி சீட்டுகளை வழங்கிவிட்டு அந்த சீட்டுகள் எல்லாம் நிரம்பவில்லை என்று அந்த நிறுவனங்கள் கொடுக்கக்கூடிய அழுத்தத்திற்கு அடிபணிந்து இப்பொழுது நீட்டில் பூஜ்ஜியத்தை விடக் குறைவாக மதிப்பெண் வாங்கி இருந்தாலும் கூட எம்.டி சீட் கிடைத்துவிடும் என்ற நிலையை உருவாக்கினால் தரமான மருத்துவர்கள் எங்கிருந்து கிடைப்பார்கள்?
இந்தியா முழுமைக்கும் எம்.டி தேர்வுக்கு 125 கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த 125 கேள்விகளில் 10 கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர்கள் எப்படி தரமான மருத்துவராக முடியும்? எம்.பி.பி.எஸ் முடித்தபிறகு ஒரு வருடம், இரண்டு வருடம் படிக்கிறார்கள்; முதுநிலை பட்டப்படிப்புக்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்கிறார்கள்; அதற்காக பயிற்சி மையங்களுக்கும் செல்கிறார்கள். மிக அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று விடுகிறார்கள். ஓரிரு மதிப்பெண் குறைவாக பெறக் கூடியவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவர்களால் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் வசூல் செய்யப்படுகின்ற ஆண்டுக்கு அரை கோடி ரூபாயை கட்ட முடியாமல் அம்மருத்துவ கல்லூரிகளில் சேர்வதில்லை.
இப்பொழுது நேற்றைய அறிவிப்பின்படி, நீட் தேர்வில் பூஜ்ஜியத்திற்கு கீழே மதிப்பெண் வாங்கினாலும் பணம் இருக்கக்கூடியவர்கள் எப்படியாவது பட்டம் இருந்தால் போதும் என்ற அடிப்படையில் அந்த இடங்களை நிரப்பிக் கொள்வார்கள். அப்படி பணம் கொடுத்துப் பட்டம் பெற்று வருவார்களால் இந்த நாட்டு மக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்? குறைந்தபட்ச தகுதியற்றவர்களை கூட மருத்துவரலாக்குவது மூலம் கோடான கோடி மக்களுக்கு நல்ல மருத்துவ வசதியை எப்படி கொடுத்து விட முடியும்?
தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் தரம் நம் கண் முன்னாலேயே இந்த அளவிற்கு தாழ்த்தப்பட்டதை ஏற்றுக் கொள்ளவோ, தாங்கிக் கொள்ளவோ இயலவில்லை. தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைச் செழிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு தவறான முடிவை மத்திய சுகாதாரத்துறை எடுத்திருக்கக் கூடாது; இது ஒரு வரலாற்று பிழை. சில சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்று சொன்னால் அந்த மருத்துவ கல்லூரிகளின் இடங்களைக் குறைப்பதுத்தான் மத்திய அரசின் சுகாதாரத் துறை மேற்கொண்டிருக்க வேண்டிய பணி ஆகும்.
ஒரு சுயநிதி மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு அவை நிரப்பப்படவில்லை என்றால் அதை அடுத்த ஆண்டு 25 ஆகக் குறைப்பதற்கு பதிலாக அந்த 50 இடங்களையும் நிரப்புவதற்கு தரத்தைக் குறைத்து நீட் தேர்வில் zero percentile முறையைப் பின்பற்ற தேசிய மருத்துவ கவுன்சில் முடிவு செய்து இருக்கக் கூடாது. தமிழகத்தில் ஏறக்குறைய 4000-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டப்படிப்புகள் உண்டு. தமிழகத்தில் தான் அதிகமான சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உண்டு. அந்தக் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் தகுதி வாய்ந்த மாணவர்களுக்குக் கல்வி கட்டணத்தை 30 லட்சம் – 50 லட்சம் என்பதை வெறும் 5 லட்சம், 10 லட்சம் எனக் குறைத்து இருந்தால் தகுதியான மாணவர்கள் கிடைத்து இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக நீட் தேர்வுக்கு சாவு மணி அடிக்கக்கூடிய வகையில் முதுநிலை பட்டப்படிப்பில் zero percentile என்ற நிலை வந்திருக்காது.
வெளிப்படையாகப் பார்த்தால் நீட் தேர்வு வடிகட்டக்கூடிய படிப்பு என்று பிரச்சாரம் செய்யக்கூடியவர்களின் வாயை அடைக்க வேண்டுமென்றால் அது உதவிகரமாக இருக்கலாமே தவிர, உண்மை அதுவல்ல. நீட் தேர்வுக்காக ஒரு வருடம், இரண்டு வருடம் படித்துத் தேர்வு எழுதக்கூடியவர்களையும், வெறுமனே வந்து வெற்றுத்தாளை கொடுத்துவிட்டு நீட் தேர்வுக்கு ஆஜராகி விட்டோம் என்ற ஒரு சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போய் சீட்டு வாங்க கூடியவர்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க மட்டுமே zero percentile உதவிகரமாக இருக்கும்.
மொத்தத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளில் zero percentile கொண்டு வந்தது அறிவுபூர்வமான செயல் அல்ல. இது பொன் முட்டையிடும் வாத்தை வயிற்றைக் கிழித்து கொன்றதை போல பல கோடான கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவ துறையின் தரத்தைக் குறைத்து மருத்துவ துறையின் மகிமையை அழிப்பதாகும். ஒட்டுமொத்தத்தில் zero percentile மத்திய சுகாதாரத்துறையின் தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். கண்ணை விற்று சித்திரம் வாங்க கூடாது என்பதற்கிணங்க சில சுயநிதி கல்லூரிகளை வாழ வைக்க மருத்துவ துறையை அழிக்கக் கூடாது.
உடனடியாக மத்திய சுகாதாரத்துறை ‘zero percentile’ உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். இதைத் திரும்பப் பெறவில்லை என்று சொன்னால் இது ஒன்றை வைத்துக் கொண்டே நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரம் இந்தியா முழுமைக்கும் உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பிரதமர் தலையிட்டு மத்திய அரசு சுகாதாரத் துறை செய்த தவறை திருத்தி அந்த உத்தரவைத் திரும்பப் பெற வழிவை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அதில் கூறியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.