மக்களுக்கு.. பறவைகாய்ச்சல் குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்துங்க.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Manjula Devi
Apr 23, 2024,04:34 PM IST

சென்னை: கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,இதுவரை தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,  பறவை காய்ச்சல் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவன டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


கடந்த சில தினங்களாக கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது தமிழ்நாட்டிலும் பரவ வாய்ப்புள்ளதால் கேரளா எல்லைப் பகுதியில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:




கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.


கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப் படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை  என்றும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  

அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.


பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.