வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு

Manjula Devi
Jan 28, 2025,06:10 PM IST

சேலம்: வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் என்றால் அது வரலாற்றில் முதல்வர் மு க ஸ்டாலின் தான் என மக்கள் சொல்லுவார்கள் என்று பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசினார். 


மாமல்லபுரத்தில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த பா.ம.க சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தின்போது கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவருக்கும் இடையே தைலாபுரம் இல்லத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் உடன்பாடு ஏற்பட்டதா இல்லையா என்று இதுவரை தெரியவில்லை.


இந்த நிலையில் சேலத்தில் இன்று கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இரு தலைவர்களும் அருகருகே அமர்ந்திருந்தனர். இருப்பினும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். அவரது பேச்சிலிருந்து:




சேலம் மாவட்டம் என்றாலே இது பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை. ஒவ்வொரு முறையும் இங்கே வருவதற்கு எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. முக்கிய காரணம் என்னுடைய வாழ்க்கை பத்தாண்டு காலம் சேலத்தில் தான் கழித்தேன். இந்த மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அத்தனை தொகுதிகளுக்கும் அத்தனை கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து இருக்கிறேன். நம் கட்சியை தொடங்கிய காரணம் பத்தாண்டு காலம்  ஒடுக்கப்பட்ட, பின் தங்கிய சமுதாயம், வன்னியர் சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திலே 1980ல் வன்னியர் சங்கத்தை தொடங்கினோம். 


இதற்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தி ரயில் மறியல், சாலை மறியல், மனித சங்கிலி என எத்தனையோ போராட்டங்களை செய்தும் அன்று இருந்து ஆட்சியாளர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. இதெல்லாம் பார்த்த ஐயா அவர்கள் அன்றைய முதல்வர் எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்று நேரம் கேட்டு அந்த நேரத்தை கூட ஒதுக்க முடியாத சூழ்நிலை. பிறகு ஐயா முடிவு செய்தார். இவர்களைக் கேட்பதற்கு பதிலாக நாமளே ஒரு கட்சியை தொடங்கலாம். ஒரு இயக்கத்தை தொடங்கி வன்னியர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா சமுதாயத்திற்கும் சமூக நீதியை வழங்கலாம். எல்லா சமுதாயத்தையும் முன்னுக்கு கொண்டு வரலாம் என்ற நோக்கத்திலேயே 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சியை ஐயா தொடங்கினார். 


கட்சி தொடங்கி தேர்தல் களத்திலேயே போட்டியிட்டோம். முதலில் போட்டியிட்டது நாடாளுமன்ற தேர்தல். பிறகு 91 இல் சட்டமன்றத் தேர்தல். ஒரு தொகுதியில் பண்ருட்டியில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி படுகொலை அந்த அலையை எதிர்த்து நின்று போட்டியிட்டோம். பிறகு 96 இல் தனியாக போட்டியிட்டோம் .அந்த தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள்.




அந்த தேர்தலிலேயே ஜெயலலிதா அம்மையார் எதிர்ப்பு அலையிலேயே நாங்களும் சிக்கிக் கொண்டோம். அந்த அலை இல்லை என்றால் குறைந்தது 20 அல்லது 22 தொகுதிகள் வெற்றி பெற்றிருப்போம். இப்படி 96 களிலேயே நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அன்றைய ஆளுங்கட்சி அண்ணா திமுக இரண்டு தொகுதியில் தான் வெற்றி பெற்றது. அதன் பிறகு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அதில் சேர்ந்தார்கள். 20 வருடங்களுக்கு முன்பு தனியாக இரண்டு தொகுதியிலேயே வெற்றி பெற்றிருக்கிற மண் இந்த மாவட்டம். இன்னைக்கும் கூட்டணியில் இரண்டு தொகுதிகள் தான் ஜெயித்திருக்கிறோம்.


அப்போ இதில் எனக்கு சந்தேகம். இது வளர்ச்சியா.. நாம் வளர்ந்து இருக்கிறோமா.. உண்மையான வளர்ச்சியா.. இவ்வளவு ஆண்டு காலத்திற்குப் பிறகு இன்னைக்கு 2 எம்எல்ஏ அன்னைக்கு தனியாக நின்னு இரண்டு எம்எல்ஏ. அப்ப நமக்கு பலம் இருக்கு. எல்லாம் இருக்கு. இளைஞர் சக்தி இருக்கு. கொள்கை இருக்கிறது செயல் திட்டம் இருக்கிறது தொலைநோக்கு பார்வை இருக்கிறது. ஆனால் அன்றைய காலத்தில் இருந்த உழைப்பு இன்றைய காலத்தில் உழைப்பு கம்மியாக தான் இருக்கிறது. அதை  ஏற்று தான் ஆக வேண்டும்.

சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் சொற்ப வாக்குகளை தான் பெற்றிருந்தது.


அண்ணாதுரையை எதிர்த்து  போட்டியிட்ட தொகுதியில் 85 ஆயிரம் வாக்குகள் பெற்றியிருந்தோம். அதெல்லாம் எங்க போயிருந்தது. அதெல்லாம் மீண்டும் வரவேண்டும். வர வைக்க வேண்டும்‌. அதெல்லாம் உங்கள் கடமை. வாக்குகள் எல்லாம் எங்கேயும் போகல. இன்னும் பத்து மாதம் இருக்கிறது சட்டமன்றத் தேர்தலுக்கு. 10 மாதத்தில் களத்தில் இறங்குங்க. செயல் திட்டம் இருக்கு. என் தம்பிகளும் தங்கைகளும் தான் என் கட்சிக்கு மிகப்பெரிய சொத்து அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இது எந்த கட்சியிலும் கிடையாது. இன்னும் பத்து மாதத்தில் நான் பார்க்க வேண்டும் சேலம் மாவட்டம் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டம் என்று. இந்த தேர்தலில் நாம் எல்லா இடத்திலும் வெற்றி பெற வேண்டும். 


கூட்டணி கூட்டணி அதெல்லாம் இல்லை. இந்த சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதியில் எட்டுத் தொகுதி தனியாக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியில் அதிக தொகுதிகளை கொடுத்தது சேலம் மாவட்டம் தான். இந்த மாவட்டத்திற்கு அய்யா நிறைய செய்திருக்கிறார். ஒகேனக்கல் திட்டம் முதன் முதலில் சொன்னது ஐயா தான். தண்ணி வீணா போகிறது, கடலில் போகிறது அந்த தண்ணிய மாவட்டத்திற்கு திருப்பி விடுங்க என்று முதன் முதலில் சொன்னது ஐயா தான். 


50000 விவசாயிகளை வைத்து எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தினோம். இந்தப் போராட்டத்தை பார்த்து அன்றைய முதல்வர் கலைஞர் இத்திட்டம் சேலத்தில் வரும் என அறிக்கை வெளியிட்டார். வன்னியர் மக்கள் எல்லாம் படிக்க வேண்டும். வேலைக்கு போக வேண்டும். ஆனா அதெல்லாம் விட்டுட்டார் முதல்வர் மு க ஸ்டாலின். நான் மணிமண்டபம் கட்டுவேன் ஆனால் இட ஒதுக்கீடு அளிக்க மாட்டேன் என்று. இது ஒரு அடையாளம். வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் என்றால் அது மு க ஸ்டாலின் தான் என்று சொல்வார்கள். 


இது நான் சொன்னது சாதாரண வார்த்தை அல்ல. எம்ஜிஆர் கூட ஐயாவுக்கு நேரம் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. அதன் பிறகு எம்ஜிஆர் அவர்களை சந்தித்தபோது வன்னியர்களுக்கு இவ்வளவு அநீதி நடக்கிறது என்பதை எடுத்துக் கூறிய போது இவ்வளவு நடக்கிறதா ஐயோ எனக்கு இது தெரியாதே இதை ஏன் சொல்லவில்லை என இரண்டு அமைச்சர்களை கடுமையாக பேசினார் எம்.ஜி.ஆர் அவர்கள். பிறகு டாக்டர் ஐயாவிடம் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்கிறேன் என கூறினார். 


இதன்பிறகு உடல்நிலை சரியில்லை என்று வெளிநாட்டிற்கு சென்றார் அதன் பிறகு இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கலைஞர் வந்தார் அவர் கூட எம் பி சி க்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார். அவர் கூட ஏதோ செய்து விட்டார். அதற்கு பிறகு ஜெயலலிதா அம்மையார் வந்தார். அவர் நல்லதும் செய்யவில்லை. கெட்டதும் செய்யவில்லை. அதன் பிறகு எடப்பாடி வந்தார். 10.5 விழுக்காடு சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தை ஸ்டாலின் அவர்கள் ஆட்சி காலத்தில் ரத்து செய்து விட்டார்கள்.


சரியான முறையில் வாதம் நடக்கவில்லை. பிறகு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய எந்த தடையும் கிடையாது. தாராளமாக கொடுக்கலாம் என கூறியது. நியாயப்படுத்தி கொடுங்க. இப்படி உச்ச நீதிமன்றம் சொல்லி மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனா மு க ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்க மனசு இல்லை. நானும் ஐயா அவர்களும் ஸ்டாலின் அவர்களை மூன்று முறை தனியாக சந்தித்தோம். நமது ஜிகே மணி எல்லாம் போய் சந்தித்தார்‌. நமது குழுவெல்லாம் போய் எத்தனையோ முறை சந்தித்தது. ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நான் நிச்சயமா செய்கிறேன் செய்கிறேன் என சொல்லி சொல்லியே எனக்கு நம்பிக்கை ஊட்டினார். எங்களுக்கும் கொடுப்பார் என்று நம்பிக்கை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது செய்ய முடியாது அது மத்திய அரசு செய்யணும் எனக் கூறிவிட்டார். 




இந்த ரெண்டு ஆண்டு காலத்தில் என்ன மாற்றம் வந்தது. இந்த மக்கள் முன்னேற கூடாது, படிக்காமல் கல்வி அறிவில்லாமல் குடிக்கும் போதைக்கும் அடிமையாகி அப்படியே இருக்க வேண்டும். முன்னேற கூடாது அப்பதான் இவர்கள் ஓட்டு போடுவார்கள். இவர்கள்தான் ஓட்டு வங்கி. இவர்கள் படித்து விட்டால் ஓட்டு போடமாட்டார்கள். அந்த ஒரே காரணத்திற்காக தான் ஸ்டாலின் இன்று அதிகாரம் இருந்தும், தரவுகள் இருந்தும் சேர்த்து இருந்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அவருக்கு மனது இல்லை. அப்ப மத்திய அரசுக்கு கடிதம் எழுதுங்கள் எம் பி சி க்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். அதை செய்ய எங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என கடிதம் எழுதுங்கள். அதெல்லாம் செய்ய மாட்டாங்க.


21 குடும்பங்களை தாசில்தார்கள் அழைத்துச் சென்று கலைஞர் செஞ்சாருன்னு சொல்லணும், ஸ்டாலின் செஞ்சார்ன்னு சொல்லணும் இப்படி வீடியோ எல்லாம் எடுத்துட்டு இருக்காங்க. யாரு சொன்னாலும் 20% விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம் ஒருவர் மட்டுமே. அவர் ஐயா மருத்துவர் அவர்கள் தான். எல்லாம் வரலாற்றில் இருக்கும் இதெல்லாம் பேசப்போகிறார்கள். வரப்போகிற தேர்தலில் தெரியும். இன்னும் பத்து மாதம் தான் பொறுத்துக்கிட்டு இருங்க .பத்து மாதத்தில் இவரால ஒன்னும் செய்ய முடியாது பாத்துக்கலாம் என ஆவேசமாக பேசினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்