"150 சவரன் நகை..15 ஏக்கர் நிலம்.. கார்".. நெருக்கிய மாப்பிள்ளை வீடு.. பெண் டாக்டர் தற்கொலை!

Meenakshi
Dec 08, 2023,06:18 PM IST

திருவனந்தபுரம்: அதீதமாக வரதட்சணை கேட்டு அதைக் கொடுக்க தவறியதால் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார். இதனால் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த பெண் டாக்டர் தற்கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட செயல் கேரளாவை அதிர வைத்துள்ளது.


கேரளாவில் மேலும் ஒரு இளம் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வந்தவர் சஹானா. அதே  மருத்துவ கல்லூரியில் படிக்கும் ருவாயிஸ்சை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்கும், திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். 




இருப்பினும் பெண் வீட்டாரிடம் பெருமளவு வரதட்சணை கேட்டுள்ளனர். எவ்வளவு  தெரியுமா?. 150 சவரன் தங்க நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் பெண் வீட்டாரால் இதை கொடுக்க முடியவில்லை. வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்தி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார்.


இது சஹானாவை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. காதலை விட கரன்சிக்கே மாப்பிள்ளை வீடு முக்கியத்துவம் கொடுத்தது அவருக்கு பெரும் அவமானமாகப் போய் விட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சஹானா, தனது ஹாஸ்டல் அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


இதையடுத்து மணமகன் ருவாயிஸ்சை வரதட்சணை வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தக் காலத்திலும் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுவதும், அதில் ஒரு உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.