கண்ணியம் காக்க வேண்டும்.. ஸ்மிருதி இராணியை தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள்.. ராகுல் காந்தி அட்வைஸ்
டெல்லி: அமேதி தொகுதியில் தோல்வியுற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குறித்து சமூக வலைதளங்களில் சிலர் கேலி கிண்டல் செய்து டிவீட் செய்து வருவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று லோக்சபா எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்கள் முற்றிலும் மோசமான ஒரு பிளாட்பார்மாக மாறி விட்டது. யாரையாவது பிடிக்காவிட்டால் மிக மிக கேவலமாக, தரக்குறைவாக, இழிவாக பேசுவதும், டிரோல் செய்வதும், வீடியோ போடுவதும் என்று முற்றிலும் நெகட்டிவான மனப்போக்குடன் கூடியவர்கள் அங்கு அதிகரித்து விட்டனர்.
சமூக வலைதளங்களில் பெரும்பாலும் நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் மிக மிக மோசமான முறையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை டிரோல் செய்கிறார்கள், கேலி கிண்டல் செய்கிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை சிலர் சமூக வலைதளங்களில் டிரோல் செய்து வருகிறார்கள். ஸ்மிருதி இராணி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து பிரபலமானார். ஆனால் 2024 தேர்தலில் அவரை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டார்.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவிக்கு மீண்டும் வர முடியாமல் போன ஸ்மிருதி இராணி தான் வகித்து வந்த அரசு இல்லத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு அதைக் காலி செய்துள்ளார். இதை வைத்து பலரும் அவரை கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தபோது கெடுபிடியாக நடந்து கொண்டு அவரை வீட்டை காலி செய்ய வைத்தனர். அப்போது அவரை நீங்கள் கிண்டலடித்தீர்கள். ஆனால் இன்று ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்திருக்கிறார்.. உங்களது நிலையைப் பாருங்கள் என்று பலர் கேலி செய்து வருகின்றனர்.
இதை ராகுல் காந்தி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில், வெற்றியோ, தோல்வியோ வாழ்க்கையில் அது சாதாரண விஷயம். ஸ்மிருதி இராணி மட்டுமல்லாமல், வேறு எந்தத் தலைவருக்கு எதிராகவும் ஆபாசமாகவோ அல்லது அநாகரீகமாகவோ யாரும் விமர்சிக்கக் கூடாது. கண்ணியம் காக்க வேண்டும். ஒருவரை விமர்சிப்பதும், அவமரியாதை செய்வதும் பலம் அல்ல, பலவீனம் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
இந்தியத் தலைவர்களிலேயே மிக மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட, கிண்டலடிக்கப்பட்ட, கேலி செய்யப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது ராகுல் காந்திதான். ஆனால் இன்னொரு தலைவரை விமர்சிக்கக் கூடாது என்று அவர் போட்டுள்ள இந்தப் பதிவு பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.