மாம்பழ சீசன் ஆரம்பிச்சாச்சு.. இயற்கையாக பழுத்த பழமாக பார்த்து.. வாங்கி சாப்பிடுங்க!

Su.tha Arivalagan
May 01, 2024,09:22 AM IST

- பொன் லட்சுமி


ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சீசன் உண்டு. அந்த வகையில் கோடைகாலம் ஆரம்பித்தாலே  மாம்பழ சீசன் தொடங்கிவிடும்... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இதன் சுவை வாயில் எச்சில் ஊற செய்து விடும்... இயற்கையாக பழுக்க வைத்த பழங்களை சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்களும் ருசியும்  முழுவதும் நமக்கு கிடைக்கும்... ஆனால் இப்பொழுது ஒரு சில வியாபாரிகள் குறுகிய காலத்தில்  லாபம் பெற வேண்டி செயற்கையாக  ரசாயன கல்மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்கள்..


இயற்கையாக பழுத்த பழமாக பார்த்து வாங்கிச் சாப்பிட வேண்டியது நம்முடைய பொறுப்பு. காரணம் நம்மளோட ஹெல்த்துக்கு நாமதானே பொறுப்பாளிகள்.


இயற்கையான மாம்பழம்:-




மாம்பழத்தில் பொதுவாக  உருண்டை, கிளி மூக்கு என்று இருவகையான மாம்பழங்கள் உண்டு... கால்சியம், பாஸ்பரஸ் , சோடியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற வகையான சத்துக்களும் இந்த மாம்பழங்களில் அடங்கியுள்ளன.. அதுமட்டுமல்லாமல் இதில் நார்ச்சத்து அடங்கியுள்ளதால்  ரத்த அழுத்தத்தை குறைத்து உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது...


முன்பெல்லாம் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்காக  மாங்காய்களை சணல் சாக்கில்  உள்ளே வைக்கோலும்  வேப்ப இலையும் அடுக்கி  அதன் மேல் மாம்பழங்களை வைத்து மறுபடியும் வைக்கோலையும்  வேப்ப இலையையும் வைத்து கட்டி விடுவார்கள். பின்  ஒரு வாரம்  கழித்து பிரித்துப் பார்த்தால்  நன்றாக பழுத்திருக்கும் .. அதனை சாப்பிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும்... 


ஒரு சில பழங்கள் மட்டும் இருந்தால் அதனை பழுக்க வைப்பதற்கு அரிசி டப்பாவிற்குள் போட்டு வைத்தால்  ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் நன்றாக பழுத்து விடும்..அதேபோல ஒரு சில பழங்கள் மரத்திலேயே பழுத்து தொங்கிக் கொண்டிருக்கும் அதனை அப்படியே மரத்திலிருந்து பறித்து சாப்பிடும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது.


காய்களை இயற்கையாக பழுக்க வைக்க இன்னொரு எளிய வழியும் உண்டு. அதாவது ஒவ்வொரு காயையும் தனித் தனியாக காகிதத்தில் சுற்றி அதை அட்டைப்பெட்டி இருந்தால் அதில் போட்டு வைக்கலாம்.. அல்லது காற்றோட்டம் உள்ள அறையில் ஒரு ஓரமாக செய்தித்தாள்களை விரித்து அதில் போட்டு வைத்து செய்தித் தாள்களாலேயே அதை மூடி வைக்கலாம். அதுவும் எளிதாக பழுக்க வைக்க ஒரு உபாயமாகும்.


ஆனால் இன்று ஒரு சில வியாபாரிகள் குறுகிய காலத்திலேயே லாபம் பெற வேண்டும் என எண்ணி  கால்சியம் கார்பைட்  போன்ற ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கிறார்கள்.. இதனை வாங்கி சாப்பிடும் மக்கள் பல்வேறு விதமான நோய்  தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்... இப்படி ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் போன்ற பல்வேறு வகையான நோய்கள் வருகிறது.. அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.


இதனை குழந்தைகள் சாப்பிடும் போது  மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.. மக்கள் தான் விழிப்புடன்  இருக்க வேண்டும்.. இந்த மாதிரி பழங்களை வாங்கும் போது நன்றாக பரிசோதித்து வாங்க வேண்டும் வெளியில் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான மஞ்சள்  நிறத்தில் இருக்கும். ஆனால் உள்ளே வெட்டி பார்க்கும்போது சரியாக பழுத்திருக்காது, மணமும் வராது, சாறும் அதிக அளவில் கிடைக்காது, சுவையும் இருக்காது .. இயற்கையாக கிடைக்கக்கூடிய   பழமாக இருந்தாலும் அதனை நன்றாக கழுவி தான்  உண்ண வேண்டும் ..


இயற்கையாக பழுக்க கூடிய பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால் செயற்கையாக  பழுக்க வைத்த பழங்கள் தண்ணீரில் மிதக்கும்... இப்படி ரசாயன கற்கள் மூலம்  பழங்களை பழுக்க வைப்பது பற்றி தெரிந்தால்  உணவு பாதுகாப்பு துறைக்கு  தகவல் தெரிவிக்கலாம்.. அதன் மூலமாக உணவு பாதுகாப்பு துறை  இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும். இதனை  தடை செய்ய  தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையும் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறது  ஆனாலும் இப்படிப்பட்ட செயல்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.




எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும்  இன்றும் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.. கடைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைப்பது கண்டறிந்தால் அவற்றை பறிமுதல் செய்து அப்புறப் படுத்துகிறார்கள், தவிர கடுமையான தண்டனை எதுவும் அளிப்பதில்லை...  தண்டனைகள் கடுமையானால் மட்டுமே இவ்வாறான செயல்கள்  பாதியாவது குறைக்கப்படும்.


இன்றைய காலத்திலேயே இப்படி ரசாயன முறையில் எல்லாம் பழுக்க வைக்கப்படுகிறது என்றால் இனி வரப் போகும் காலங்களில்  மாம்பழங்கள் சாப்பிடும் ஆசையே போய்விடும் போல.. முக்கனிகளில் முத்தாய்ப்புக் கனியான மாம்பழ சீசனை சந்தோஷமாக அனுபவிப்போம்.. இயற்கையாக பழுக்க வைத்த பழங்களை சாப்பிட்டு மகிழ்வோம்!