இந்த.. நக்கல் நையாண்டியை எல்லாம் வேற கட்சி கிட்ட வச்சுக்கங்க.. ஜெயக்குமார் கோபாவேசம்!
சென்னை: கூட்டணி குறித்த அண்ணாமலை கருத்துக்கு, இந்த நக்கல் நையாண்டி எல்லாம் வேற கட்சிகிட்ட வைச்சிக்கோங்க என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று சென்னை உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விருப்ப மனுவை பெற்று அதற்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி திரும்பி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரும்ப மனு வழங்கும் இடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு பதில் அளித்தார்.
கூட்டணிக்கான கதவு மட்டுமில்லை, ஜன்னலையும் திறந்து வச்சிருக்கோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நக்கல் நையாண்டி எல்லாம் வேற கட்சியில் வைத்துக்கோங்க, இந்த நக்கல் நையாண்டி எல்லாம் எங்க கட்சியில் எடுபடாது. நாங்கள் தெளிவா இருக்கோம். அவர் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் வேற கட்சிக்குதான்.
நாங்க எடுத்த முடிவில் தெளிவாக உள்ளோம். எங்களை பொருத்தவரை எடுத்த முடிவில் இருந்து பின் வாங்குற ஆள் இல்லை. நீங்க எந்த நேரத்தில் கேட்டாலும் பிஜேபியோட ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. கண்டிப்பாக நாங்கள் பிஜேபியுடன் வரவும் இல்லை கூட்டணியும் இல்லை. இந்த தேர்தலில் ஒரு மகத்தான கூட்டணி நிச்சயமாக இருக்கும். உரிய நேரத்தில் மகத்தான கூட்டணியை பொதுச் செயலாளர் அறிவிப்பார்.
உண்மை தொண்டர்கள் அதிமுகவில் நீடிக்கிறார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிள்ளை பிடிக்கும் வேலை செய்து வருகிறார். அண்ணாமலையின் தாடியை பார்க்கும் போது மாயாண்டி பூச்சாண்டி மாதிரி தான் இருக்கிறது. பூச்சாண்டியை பார்த்து மற்ற கட்சிகள் பயப்படலாம், நாங்கள் பயப்பட மாட்டோம்.
திரிஷா குறித்த பேச்சுக்குக் கண்டனம்
ஒரு நடிகை பற்றி அப்படி பேசி இருக்கக் கூடாது. நடிகை திரிஷா எந்த அளவிற்கு மன கஷ்டப்பட்டு டுவிட் போட்டு இருக்கிறார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகைகளின் பெண்மையை இழிவுபடுத்தி பேசக்கூடாது. ஏவி ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.