கோமியம் விஞ்ஞான பூர்வமாக அமிர்த நீர்.. ஆயுர்வேத மருந்து.. அரசியலாக்காதீர்கள்.. டாக்டர் தமிழிசை

Meenakshi
Jan 21, 2025,07:07 PM IST

சென்னை: மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள், ஆனால், விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள் என்று மருத்துவரும், பாஜக மூத்த தலைவருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


கடந்த 15ம் தேதி மாட்டுப்பெங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது என்று பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அத்துடன் அது சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளித்தார்.


அப்போது, கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான 5 ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஒரு காப்புரிமை தொடர்பான அறிக்கை என்னிடம் உள்ளது. பண்டிகையின் போது நான் பஞ்சகவ்யம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.




இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு மருத்துவரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை பேசுகையில், மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள். மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள், ஆனால், விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.  ஆராய்ச்சிப் பூர்வமாக கோமியத்தில் நுண்ணுயிர்களை தடுக்கும் சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் அதை வீட்டின் முன்பு தெளிப்பார்கள். மாட்டின் சிறுநீரான கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என எழுதப்பட்டுள்ளது. அதை, அமிர்த நீர் என்று குறிப்பிடுகிறார்கள். 


80 நோய்களை இது குணப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். அதில், காமகோடி சொன்ன காய்ச்சலும் ஒரு வகையாக இருந்திருக்கலாமே. அறிவுப்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்குபவர் சும்மா எதையேனும் சொல்வாரா?.


நம் தமிழ்நாட்டில் உள்ள சங்க இலக்கியத்தில் மாட்டுச் சாணம் பூசிய முற்றங்கள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? மாட்டுச் சாணத்தில் கிருமிநாசினி இருக்கிறது என்றால், மாட்டின் சிறுநீரிலும் கிருமிநாசினி இருக்கும்தான். மியான்மர், ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் கூட கோமியத்தை மருந்தாக எடுத்துக்கொள்கிறார்கள். 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்தாக உள்ளது. கோமியத்தை அமிர்த நீர் என்றே குறிப்பிடுகிறார்கள். 


நான் ஒரு அலோபதி டாக்டர். நான் கோமியத்தை பற்றி பேசுகிறேன் என்றால், ஆயுர்வேதத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்றால் நான் பேச மாட்டேன். ஆராய்ச்சி என்று சொன்னவுடன் அது ஞாபகத்துக்கு வந்தது. உண்மையில் நல்லதை தமிழகம் எடுத்து கொள்ள வேண்டும். மத்திய அரசு திட்டம் என்றாலும் எடுத்து கொள்ள மாட்டிங்க. உண்மையில் ஆராய்ச்சி செய்து இது நல்லது என்று சொன்னாலும் எடுத்து கொள்ள மாட்டிங்க. விஞ்ஞான ரீதியாக அது அமிர்த நீர் என்று ஆயுர்வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் உடனே குதி, குதி என்று குதிக்கிறீர்கள். கோமியம் குடிப்பதில் இவர்களுக்கு பிரச்னை இல்லைல. டாஸ்மாக் குறைந்து விடுமோ? என்ற பயம் வந்து இருக்கலாம் என்றார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்