"குழந்தைகள் கடத்தப்படுவதாக".. சோசியல் மீடியாவில் போலி வீடியோக்கள்.. போலீஸ் எச்சரிக்கை
சென்னை: குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறி சோசியல் மீடியாவில் சில விஷமிகள் போலியான ஆடியோ மற்றும் வீடியோக்களைப் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் தாறுமாறாக பொய்ச் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. யார் பரப்புகிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்றே தெரியவில்லை. மக்களிடையே குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் சில பித்தலாட்டக்காரர்கள் ஈடுபடுகிறார்கள்.
வாட்ஸ் ஆப்பில் யார் என்ன வாந்தி எடுத்து வைத்தாலும், அதைப் பார்த்து பரவசப்படும் பலரும், உண்மை என்று நம்புவோரும் சரசரவென அதை பார்வர்ட் செய்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புவோர் அடுத்தடுத்த வதந்திகளுக்குப் போய் விடுகிறார்கள்.. கடைசியில் அப்பாவி மக்கள் பீதியுடனேயே வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அண்மைக்காலமாக குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக போலியான வீடியோக்கள், ஆடியோக்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இதுபோன்ற போலி வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமீப காலமாக சில நபர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற பிரதான எண்ணத்துடனும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதை சென்னை பெருநகர காவல் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது.
இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொளிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ பதற்றமடையவோ தேவை இல்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது,
பொது மக்களுக்கு இது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணம் இல்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாததை பார்வர்ட் பண்ணாதீங்க
பொதுமக்களாகிய நாம் எப்போதும் பொறுப்புடன் செயல்படுவோம்.. இதுபோன்ற ஆடியோக்களோ அல்லது வீடியோக்களோ உங்களது வாட்ஸ் ஆப்புக்கு வந்தால், உடனே பதறிப் போய் பத்து பேருக்கு அதை பரப்புவதை நிறுத்துங்கள். மாறாக காவல்துறையில் புகார் கொடுங்கள்.. இப்போதெல்லாம் வாட்ஸ் ஆப்பிலேயே புகார் கொடுக்கும் வசதியை காவல்துறை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருந்தால் மட்டுமே வாட்ஸ்ஆப் விஷமிகளின் நோக்கம் தோல்வியடையும்.
அதேபோல வாடஸ் ஆப்பில் எது வந்தாலும் உடனே பார்வர்ட் செய்யும் கெட்ட பழக்கத்தையும் விட்டொழியுங்கள்.. வந்ததை நாலு பேருக்கு அனுப்பும் அளவுக்கு அது முக்கியமானதா அல்லது அதனால் ஏதாவது நன்மை இருக்கிறதா என்று பாருங்கள். அதன் பிறகு பார்வர்ட் செய்ய வேண்டியதை மட்டும் செய்யுங்கள்.. எல்லாவற்றையும் பார்வர்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
காலையில் எழுந்தோமா.. நல்ல கனிஞ்ச வாழைப்பழத்தை சாப்பிட்டோமா.. கக்கூஸுக்குப் போனோமா.. கலகலன்னு "கடமையை" முடிச்சோமா.. வெளியே வந்தோமான்னு இருங்க.. வாட்ஸ் ஆப்பையெல்லாம் அங்க வச்சு நோண்டி தேவையில்லாத வேலையெல்லாம் பண்ணாம இருந்தோம்னா.. எல்லாத்துக்கும் நல்லது!