"செல்போனில் காதலா"... அய்யோ..  வேணவே வேணாம்.. பெண்களுக்கு ராதிகா அட்வைஸ்!

Meenakshi
Nov 28, 2023,06:59 PM IST

வேலூர்: நெல் இல்லாத ஊரைக் கூட பார்த்து விடலாம்.. ஆனால் செல் இல்லாத ஒருவரைக் கூட பார்க்க முடியாது.. அந்த அளவுக்கு முதுகெலும்பு போல நம்மோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது செல்போன். ஆனால் அதற்கு அடிமையாகி அதில் மூழ்கிப் போய் விடாதீர்கள் என்று இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நடிகை ராதிகா சரத்குமார் அறிவுரை கூறியுள்ளார்.


அதிலும் செல்போனிலேயே காதல் கொள்வது வேண்டவே வேண்டாம் என்று பெண்களுக்கு குறிப்பாக அறிவுரை கூறியுள்ளார் ராதிகா.


செல்போனுக்கு கிட்டத்தட்ட நாமெல்லோருமே அடிமையாகி கிடக்கிறோம்.. அடிமையாக இருக்கிறோம் என்பதை விட அதில்தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது நம்முடைய கட்டமைப்புகள். எதுவாக இருந்தாலும் செல்போனை எடு என்ற நிலைக்கு நம்முடைய வாழ்க்கை முறை நம்மை தள்ளி விட்டுள்ளது.




காஸ் சிலிண்டர் வாங்கினால் கூட அதில் ஓடிபியைச் சொல்லச் சொல்கிறார்கள். எது செய்தாலும் ஓடிபி, எங்கு போனாலும் மெசேஜ் என்று செல்போன் இல்லாமல் ஒரு நொடியைக் கூட நம்மால் செலவழிக்க முடிவதில்லை. ஆனால் குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தொலைபேசியில் மூழ்கிக் கிடக்கின்றனர். தொலைபேசி மோகத்தால் மனிதர்களை மதிக்காமல் நாள் முழுவதும் தொலைபேசியிலேயே வாழ்க்கையை தொலைக்கும் அளவிற்கு மாறி வருகின்றனர் பலர்.


ஆனால் வழக்கம் போல எல்லா நல்லவற்றுக்கும் மத்தியில், கெட்டது இருக்கும் என்பது போல, மொபைல் போனை தவறாக பயன்படுத்துவோரும் உள்ளன. அந்தத் தவறுகளை நம்பி மோசம் போவோரும் அதிகரித்தபடியே உள்ளனர். இதனால் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே மாறி வருகிறது. இவற்றில் இருந்து இளைய தலைமுறையினர் தப்பித்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது குதிரைக்கொம்பாகி உள்ளது. 


எல்லோரும், நல்லதை கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ  கெட்ட விஷயங்களை அதிகளவில் கற்கும் நிலை தான் உள்ளது. நல்லது  கூறுபவர்களை ஏளனமாக பார்க்கும் நிலை தான் ஏற்படுகிறது. அதுவும் அறிவுரை என்றால் பலருக்கு கசப்பாக தான் தோன்றுகிறது எனலாம். இப்படிப்பட்ட காலத்தில் தனாக முன் வந்து அறிவுரை வழங்கியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். ராதிகாவின் பேச்சிற்கு நல்லவிதமாகவும் எதிர்மையாகவும் விமர்சனங்கள் இணைய பக்கங்களில் குவிந்து வருகின்றன.


வேலூர் மாவட்டம் அரியூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் ராதிகா. அப்போது சில அறிவுரைகளை வழங்கி அவர் பேசினார். ராதிகா பேசும்போது, செல்போனை முழுமையாக நம்பி அதிலேயே இருக்காதீங்க. குறிப்பாக செல்போன் காதல் வேண்டவே வேண்டாம். செல்போனை நம்பி காதலை வளர்க்காதீங்க. அதை விட்டு விடுங்க.   நிறையப் பேர் பிக் பாஸ் பார்ப்பதில் ரொம்ப அக்கறை காட்டுகின்றனர். அதில் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறாங்க. அதைப் பார்ப்பதால் என்ன கிடைக்கப் போகிறது.


பெண்களே, தயவு செய்து உங்க உடம்பைப் பாருங்க. ஹெல்த் முக்கியம். அதில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். உடம்பைப் பார்த்துக் கொண்டால்தான் குடும்பத்தைக் காக்க முடியும். அவ்வப்போது உடல் நலப் பரிசோதனை செய்துக்கங்க. அது அவசியம் என்றார் ராதிகா சரத்குமார்.


எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பதே நல்லது.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!