11 டூ 3 மணி வரை.. வெளியிலேயே வராதீங்க.. மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அட்வைஸ்!
Apr 30, 2024,05:16 PM IST
சென்னை: கடுமையான கோடை வெயில் காரணமாக பிற்பகல் 11 மணி முதல் 3.30 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோடை வெயில் தற்போது பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுவும் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
நாளை முதல் மே 3ம் தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 3 முதல் 5டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று முதல் மே 4 தேதி வரை உள்ள மாவட்டங்களில் சமவெளி பகுதிகள் ஒரு சில இடங்களில் 39 முதல் 43 டிகிரி செல்சியஸ்சும், இதர தமிழக மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ்சும், கடலோர தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம். நாளை முதல் மூன்றாம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.