"என்னாது புதுப் புயல் வருதா".. என்னய்யா சொல்றீங்க.. "நம்பாதீங்க".. வெதர்மேன் ஆறுதல் மெசேஜ்!!

Su.tha Arivalagan
Dec 06, 2023,10:23 PM IST

சென்னை: அரபிக் கடலில் புதிய புயல் வரப் போவதாக யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அது வதந்தி என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர்களை ஒரு உலுக்கு உலுக்கி விட்டுப் போயுள்ளது மிச்சாங் எனப்படும் மிக்ஜாம் புயல். அதன் பாதிப்பிலிருந்து மீளுவதற்கு இன்னும் சில நாட்களாகும் என்ற நிலை உள்ளது.


இந்த நிலையில் அடுத்து ஒரு புயல் வரப் போவதாக வதந்தி கிளப்ப ஆரம்பித்து விட்டனர் சில பிரகஸ்பதிகள். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அது இந்த வதந்தி வாயர்களின் வாயை அடைப்பது போல உள்ளது.




தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது இதுதான்..


அடுத்த வாரம் சென்னையை நோக்கி ஒரு புயல் வரப் போவதாக சொல்வது அடிப்படையே இல்லாத வதந்தி. தயவு செய்து அதுபோன்ற செய்திகளை யாரும் நம்பாதீர்கள். அரபிக் கடலில் டிசம்பர் 10ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தம் அல்லது UAC உருவாகலாம். ஆனால் அது இந்தியக் கடற்கரையை விட்டு விலகிப் போய் விடும். இதற்கும் சென்னைக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.


இப்போதுதான் மிச்சாங் மிச்சம் வச்சுட்டுப் போனதிலிருந்து நாம் மெல்ல மீண்டு வருகிறோம். இந்த நிலையில் புதுப் புயல் வருது என்று கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பே இல்லாமல் வதந்தி கிளப்புவது எந்த வகையான செயல் என்று தெரியவில்லை. மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இதுபோன்ற செயல்களை சம்பந்தப்பட்டோர் நிறுத்திக் கொள்வதுதான் அவர்கள் மக்களுக்கு செய்யும் பெரிய புண்ணியம்.