கமலா, நீங்க கருப்பரா இல்லை இந்தியரா?.. இன ரீதியான தாக்குதலில் குதித்த டொனால்ட் டிரம்ப்!

Su.tha Arivalagan
Aug 02, 2024,12:04 PM IST

வாஷிங்டன்:   அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தன்னை இந்தியர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விட கருப்பர் என்று முன்னிலைப்படுத்தவே விரும்புவதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் இனவெறித் தாக்குதலில் இறங்கி விட்டதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும், மறுபக்கம் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் களத்தில் உள்ளனர். கமலா ஹாரிஸின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் மீது புதுத் தாக்குதலை தொடுத்துள்ளார் டிரம்ப்.


சிகாகோவில் நடந்த தேசிய கருப்பர் இன பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு டிரம்ப் பேசினார். அப்போதுதான் கமலாஹாரிஸின் இனம் குறித்து அவர் விமர்சித்துப் பேசினார். டிரம்ப் பேச்சிலிருந்து:


கமலா ஹாரிஸின் பூர்வீகம் எப்போதும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தே இருந்திருக்கிறது. அவரும் கூட இந்திய பாரம்பரியத்தைத்தான் போற்றி வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் கருப்பர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் திடீரென அவர் கருப்பராக மாறியிருக்கிறார். தன்னை கருப்பராக அடையாளப்படுத்த அவர் விரும்புகிறார்.




எனவே அவர் கருப்பரா இல்லை இந்தியரா என்று எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் அதை நான் மதிப்பேன் என்பது வேறு விஷயம்.  ஆனால் இந்தியராகவே இத்தனை காலம் இருந்து விட்டு திடீரென அவர் கருப்பராக மாற முயற்சிப்பதுதான் வியப்பாக இருக்கிறது என்று டிரம்ப் கூறினார்.


உண்மையில் இந்திய - கருப்பர் இன கலப்புதான் கமலா ஹாரிஸ். அவரது தாயார் இந்தியர், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த கருப்பர் இனத்தவர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் கருப்பர் இன வாக்குககளைப் பெற கமலா ஹாரிஸ் திட்டமிடுவதாக மறைமுகமாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார் என்று கருதப்படுகிறது. அதாவது கருப்பர் இனத்தவர்களிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களில் ஒரு தரப்பை கமலாவுக்கு எதிராக திருப்ப டிரம்ப் முயல்வதாகவும் கூறப்படுகிறது.


இதே கருத்தையே கமலாவும் பிரதிபலித்துள்ளார்., டிரம்ப் பேச்சு குறித்து கமலா ஹாரிஸ் கருத்து தெரிவிக்கையில், டிரம்ப் குணம் குறித்து எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். அவர் என்ன டைப்பான ஆள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பிளவுவாத குணம் கொண்டவர்தானே அவர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் கமலா ஹாரிஸ்.


அமெரிக்காவைப் பொறுத்தவரை கருப்பர் இனத்தவர்கள் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சிக்கே ஆதரவாக இருப்பவர்கள். குடியரசுக் கட்சிக்கும் அவர்களுக்கும் ஒத்தே வராது. அந்த வாக்கு வங்கியை உடைக்கும் வேலையில்தான் தற்போது டிரம்ப் இறங்கியிருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.  கடந்த 2020 தேர்தலின்போது 92 சதவீத கருப்பர் வாக்குகள் ஜோ பிடனுக்கே கிடைத்தது. வெறும் 8 சதவீதம் பேர்தான் டிரம்ப்புக்கு வாக்களித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.


தற்போதைய டிரம்ப் பேச்சு அவருக்கு எதிராகவே திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.