கமலா ஹாரிஸை விட.. என்னை ஏண்டா இப்படி அழகா படைச்ச ஆண்டவா.. டொனால்ட் டிரம்ப் காமெடி!
வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸை விட நான் பார்க்க நன்றாக இருக்கிறேன் என்று கூறி காமெடி செய்துள்ளார் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்.
டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோதே குண்டக்க மண்டக்க டிரோல் செய்யப்பட்டவர். இப்போது அவரே தன்னைப் பற்றி ஏகப்பட்ட கன்டென்ட் கொடுத்து வருகிறார் டிரோல் செய்பவர்களுக்கும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும். அவரது பேச்சுக்கள் தொடர்ந்து சலசலப்பையே ஏற்படுத்தி வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு கமலா ஹாரிஸ் குறித்து அவர் பேசும்போது, கமலா இந்தியரா அல்லது ஆப்ரிக்கரா என்று கேட்டு இன ரீதியான தாக்குதலைத் தொடுத்தார். இது அவருக்கே எதிராக போய் முடிந்தது. பலரும் டொனால்ட் டிரம்ப்பை கண்டிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தற்போது இன்னொரு காமெடியைச் செய்துள்ளார் டிரம்ப்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு டிரம்ப் பேசுகையில், நான் அவரை விட அழகாக இருக்கிறேன். பார்க்க நன்றாக இருக்கிறேன். கமலாவை விட நான்தான் ரொம்ப நன்றாக இருக்கிறேன் என்று கருதுகிறேன். செனட் தேர்தலில் போட்டியிடும் டேவிட் மெக்கார்மிக் இங்கு இருக்கிறார். ஹாய் டேவிட், ஒரு பெண்ணை அழகாக இருக்கிறார் என்று சொல்லிராதீங்க.. அத்தோடு உங்க அரசியல்வாழ்க்கை முடிந்து விடும். உண்மையில்தான் நான்தான் கமலா ஹாரிஸை விட அழகாக இருக்கிறேன் என்று கூறினார் டிரம்ப்.
டிரம்ப் இப்படிக் கூறியதற்குக் காரணம் உள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கட்டுரை ஆசிரியர் பெக்கி நூனன் எழுதும்போது, கமலா ஹாரிஸ் மிகவும் அழகாக கம்பீரமாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் மக்கள் மீது கரிசனம் கொண்டவராகவும், புத்திசாலியாக இருப்பதாகவும் அவர் பாராட்டியிருந்தார். பேச்சை விட செயலில் அவர் அதிகம் காட்டுகிறார் என்றும் பாராட்டியிருந்தார் பெக்கி நூனன். இதுதான் டிரம்ப்பை கடுப்பாக்கி விட்டதாக சொல்கிறார்கள்.
டிரம்ப் அத்தோடு நிற்கவில்லை. கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் கம்யூனிசத்தைக் கொண்டு வர முயல்கிறார். அவர் மதுரோ பிளானுடன் இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். மதுரோ என்பது வெனிசூலா நாட்டின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ ஆவார். கம்யூனிச தலைவரான மதுரோ வெனிசூலாவின் அசைக்க முடியாத தலைவராக இருப்பவர். அவரையும் வம்புக்கிழுத்துப் பேசியுள்ளார் டிரம்ப்.
தொடர்ந்து கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையில் தாக்கி டிரம்ப் பேசி வருவது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. பைத்தியம் பிடித்த பெண் என்றெல்லாம் கூட கமலா ஹாரிஸை அவர் தாக்கிப் பேசியுள்ளார். தொடர்ந்து இவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது ரொம்ப எளிதாகி விடும் என்று ஜனநாயகக் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.