LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

Manjula Devi
Apr 07, 2025,08:54 PM IST
டெல்லி: சர்வதேச சந்தையில் எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்ந்து வருவதால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.


இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் வணிக சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின்  விலையை தீர்மானிக்கின்றன. அதன்படி சிலிண்டர்களின் பயன்பாட்டை பொறுத்து ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டரின் விலை ரூபாய் 43.50 விலை குறைந்து ரூபாய் 1921 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

ஆனால் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 818க்கு விற்பனையானது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.



இதற்கிடையே கடந்த மார்ச் 20 ஆம் தேதி இந்திய எண்ணெய் நிறுவனம் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது ஒரு வீட்டில் வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் மட்டுமே பதிவு செய்து அதனை பயன்படுத்த முடியும். இதுக்கு மேல் தேவைப்பட்டால் உரிய ஆவணத்துடன் கூடுதல் சிலிண்டர்களை பெறலாம் என அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் தற்போது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50  உயர்ந்து, ரூபாய் 868.50  உயர்த்தப்படுகிறது.

சமையல் எரிவாயுவை குறைந்த விலைக்கு விற்பதால் எண்ணெய் நிறுவனத்திற்கு ரூபாய் 41,386 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை ஈடு  செய்வதற்காக வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை உயர்த்தப்படுகிறது .

மேலும் சர்வதேச சந்தையில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருவதால் அதற்கேற்ப சிலிண்டரின் விலை உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளை முதல் அமலுக்கு வரும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.