சிறுமியை கடித்து குதறிய நாய்.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விடுத்த வார்னிங்!

Meenakshi
May 06, 2024,04:40 PM IST
சென்னை: 5 வயது சிறுமியை கடித்து குதறியதில், அச்சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விளக்கிய, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நாய் வளர்ப்போருக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்காவின் காவலாளராக இருப்பவர் ரகு. இவர், மனைவி மற்றும் மகள் மூவரும் அதே பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் தங்கியுள்ளனர். சம்பவம் நடந்த அன்று காவலாளி ரகு உறவினர் இறப்பு தொடர்பாக விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது அந்த பூங்காவில் மனைவியும், மகளும் மட்டும் இருந்துள்ளனர். அந்த பூங்காவில் நெடு நேரமாக மகள் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். 

இந்த நிலையில், பூங்காவின் அருகே வாசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் நாய்களை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு வந்துள்ளார். காவலாளி ரகுவின் மகள் சுதக்ஷா அருகே புகழேந்தியின் நாய்கள் வந்தபோது, திடீரென இரண்டு நாய்களும் கடுமையாக கடித்துள்ளன. குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த தாய் சோனியா இரண்டு நாய்களுடன் போராடி மகளை காப்பாற்றியுள்ளார். இந்த போராட்டத்தில் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. 



ஆனால் புகழேந்தியோ நாய்களைத் தடுக்க முயலாமல், இரண்டு நாய்களையும் அங்கேயே விட்டு விட்டு அவர் ஓடி விட்டார். நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் புகழேந்தியை  அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சிறுமியின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.  

நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி , மகன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் இன நாய்களை வைத்திருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சிறுமியை கடித்த ராட்வீலர் நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏன் உரிமம் பெறவில்லை என விளக்கம் கேட்டு உரிமையாளர் புகழேந்திக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு பின்னர் கால்நடைத்துறை உடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பிடித்து இடத்திலேயே விட வேண்டும் என்பது தான் மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய், பூனை போன்ற பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிய வளர்ப்பு உரிமம் லைசென்ஸ் பெற வேண்டும். அதோடு வளர்ப்பு பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.