"தங்கச்சியை நாய் கட்ச்சிருச்சுபா".. "மூர்த்தி குடும்பத்தாரின்" லொள்ளு.. நெல்லையில் வேற லெவல் வேதனை!

Su.tha Arivalagan
Nov 24, 2023,09:55 PM IST

திருநெல்வேலி: "தங்கச்சியை நாய் கட்ச்சிருச்சுபா".. ஊரே ஜனகராஜ் லெவலுக்கு எங்கு பார்த்தாலும் ஒப்பாரிக் கோலமாக மாறியிருக்கிறது. அந்த அளவுக்கு நாய்க்கடி பிரச்சினை பெரிதாக பேசப்படுகிறது. அழகான சென்னை முதல் அல்வா நகரம் திருநெல்வேலி வரை இதே கதைதான்.


நெல்லையில் இந்த நாய்க்கடி பிரச்சினையை வேற லெவலில் ஃபீல் செய்து பார்த்திருக்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த சிராஜ் என்பவர். தான் சார்ந்த 36வது வார்டில் நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதை போஸ்டர் போட்டு ஊரெல்லாம் ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார். இப்போது நெல்லையில் உள்ள எல்லா நாய்களின் (அதாவது கடிக்கும் நாய்களின்) கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு இது வைரலாகியுள்ளது.


அப்படி என்னதான் போட்டிருக்கிறார் சிராஜ் அந்த போஸ்டரில்.. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் பகபகவென சிரிப்பு வரும் அளவுக்கு மேட்டர் இருக்கு பாஸ் அதுல!




மொத்தம் 5 நாய்களின் படத்தைப் போட்டு அவர்களின் ப(ய)யோ டேட்டாவையும் இணைத்து அவை செய்த சேட்டைகளையும் Tabular காலத்தில் வரிசைப்படுத்தி அசத்தியுள்ளார் சிராஜ். ஒரு நாயின் பெயர் புண்ணியமூர்த்தி.. இதுக்கு வயசு 5 மாசம்தான். இதோட குணம் சண்டை இழுத்தலாம்.. ஒருத்தரை கடிச்சிருக்காம்.. அடுத்தவர் பெயர் தட்சிணாமூர்த்தி. கலத்தூர் காரர். இவருக்கு 4 வயது. வாயைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது. இவருக்கு வேலை கடித்து வைத்தலாம். 16 பேரை கடிச்சிருக்காராம்.


சுந்தரமூர்த்தி இருக்கானே.. அவன் மட்டும் ஒரு தினுசா கடிப்பான்!


அடுத்து வருபவர் வழுவகுடி சுந்தரமூர்த்தி.. இவருக்கும் வயசு 3 தான். ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டுவாராம் இந்த சுந்தரமூர்த்தி.. அவனா நீயி.. என்று ஆச்சரியத்துடன் கேட்டாலும் கூட இவர் இதுவரை 6 பேரை கடிச்சு வச்சிருக்கிறார் என்ற டேட்டா.. கொஞ்சம் எகிற வைக்கிறது.


இவரை விடுங்க.. இந்தக் கூட்டத்தோட தல யார் தெரியுமா.. அவர்தாங்க கலத்தூர் காலணி தெரு சத்தியமூர்த்தி.. இவர்தான் சங்கத் தலைவனாம். 10 பேரை கடிச்சு வச்சிருக்கிறாராம். இன்னொருத்தவர் இருக்கார்.. அவர்தான் சீனியர். 5 வயசாகிறது. பேரு வேலக்குடி ராமமூர்த்தி. பதுங்கி இருந்து விரட்டுவாராம்.. இவர் எத்தனை பேரை கடிச்சிருக்கார்னு தெரியலை.. அந்த டேட்டை கிடைக்கலையாம்..


அதுல பாருங்க.. இதுல என்ன ஒரு விசேஷம்னா.. எல்லா நாயாரோட பேரும் மூர்த்தின்னு முடிவதுதான்.. ஒரு வேளை ஒரே குடும்பமோ என்னவோ.. இருந்தாலும் சிராஜுக்கு அசாத்திய பொறுமைதான். உக்காந்து ஒவ்வொரு நாயும் என்ன பண்ணுதுன்னு டேட்டா கலெக்ட் பண்ணிருக்காரு பாருங்க.. வேற லெவல்தான்.. ஆனாலும் அவரோட வேதனையை மதிச்சு.. மாநகராட்சி நிர்வாகம் இந்த மூர்த்தி குடும்பத்தாரை அழைத்து.. ஏதாச்சும் நிவர்த்தி செய்தா கொஞ்சம் புண்ணியமாப் போகும்.. செய்வீங்களா ஆபீசர்ஸ்!