கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
சென்னை: சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான விக்னேஷ்க்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜியை, விக்னேஷ்வரன் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷ்வரனை கைது செய்த போலீசார் விசாரித்ததில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் மருத்துவரை தாக்கியதாக இளைஞர் கூறினார்.
மருத்துவரை தாக்கிய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனையில் ஆயுதம் எடுத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து தற்போது விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக் கூடாது என கூறப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி விக்னேஷ்ன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்