தேர்தல் ஆணையம் போட்ட பலே உத்தரவு.. அப்டீன்னா "ஆய்" போன குழந்தைக்கு வேட்பாளர் கால் கழுவ முடியாதா?
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரத்தின்போது, குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியின் தலைமை முதல் தொண்டர்கள் வரை களத்தில் இறங்கி பணி செய்ய தொடங்கிவிட்டனர்.
யார் யாருடன் கூட்டணி, எந்த கூட்டணிக்கு எந்த தொகுதி, எந்த வேட்பாளர்களுக்கு என்ன தொகுதிகள் வழங்கலாம் உள்ளிட்ட வேலைகளில் அனைத்து கட்சியின் தலைமைகளும் செயல்பட தொடங்கி விட்டன.
வேட்பாளர்களின் ஈஸி டார்கெட்.. குழந்தைகள், பெண்கள்!
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களின் ஈசி டார்கெட் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான்.. அதிலும் பாட்டியைக் கண்டால் வேட்பாளர்களுக்கு செம குஷியாகி விடும்.. இப்படித்தான் தெலங்கானா மாநிலத்தில் ஒரு அமைச்சர் ஒரு பாட்டியைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி போஸ் கொடுத்து ரணகளம் செய்த கதையும் நடந்தது.
இந்நிலையில் மக்களவை தேர்தலின் போது யாரும் குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்க கூடாது. மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்ய மேற்கொள்ளவோ, சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம் செய்யேவா, முழக்கம் எழுப்பவோ, பேரணிகள் ஈடுபடுத்துவதையோ அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரச்சார மேடைகளில் பேச வைப்பது, முழக்கமிட வைப்பது, பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது, பாடல் பாட வைப்பது, கவிதை பேச வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை "ஆய்" போனால் வேட்பாளர் கால் கழுவ முடியாது!!!!
அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கிச் செல்வது, பிரச்சாரம் மற்றும் பேரணி வாகனங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேர்தல் பணிகளில் பயன்படுத்தினால் கடுமையாக தட்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் பலரும் வந்து குழந்தைகளைக் கொடுத்து பெயர் வைக்கச் சொல்வார்கள்.. மாலை போடச் சொல்வார்கள்.. வேட்பாளர்களை வாழ்த்தி கவிதை பாடச் சொல்வார்கள்.. தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது "ஆய்" போன குழந்தைக்கு கால் கழுவி விட்டெல்லாம் ஒரு வேட்பாளர் பிரச்சாரத்தையே "கமகமக்க" செய்தார்.
இப்படிப்பட்ட கலாட்டாக்களுக்குத்தான் தற்போது ஆப்பு வைத்துள்ளது தேர்தல் ஆணையம்!