கொஞ்சம் பொறுங்களேன்.. ஏன் அவசரப்படறீங்க.. வதந்தி பரப்பாதீங்க.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
சென்னை: கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். விரைவில் பேசி முடிவெடுத்து விட்டு சொல்வோம். அதற்குள் அதிமுகவுடன் கூட்டணி, அவர்களுடன் கூட்டணி என்று வதந்தி பரப்பாதீர்கள் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் முழு மூச்சாக இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். யார் யாருடன் எப்படி கூட்டணி அமைப்பார்கள் என்று தெரியாத நிலையில் உள்ளது தற்போதைய அரசியல் சூழல். கட்சிகளின் தலைமைகள் ஒருபுறம் பரபரப்பு என்றால், மற்றொருபுறம் தொண்டர்களும் பரபரப்பாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி சேரலாம் என்று ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. நேற்று முன் தினம் இரவு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் என சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரவு 7 மணி முதல் 7.50 வரை நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பு எதற்காக ஏன் என்று இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதேபோல டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், டாக்டர் அன்புமணி ராமதாஸை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்ததாகவும் ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கினார்.
அவர் கூறுகையில், கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். யாருடன் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதற்குள் என்ன அவசரம்.. சீக்கிரம் சில நாட்களில் நிலைப்பாட்டை அறிவிப்போம். டாக்டர் ராமதாஸை, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்ததில் அரிசியலே பேசப்படவில்லை.
பொதுக்குழுவில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கு ஐயாவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் பேசி முடிவெடுத்து விட்டு சொல்வோம். அதற்குள் அதிமுகவுடன் கூட்டணி, அவர்களுடன் கூட்டணி என்று வதந்தி பரப்பாதீர்கள்.
சி.வி.சண்மும் சந்தித்தது மரியாதை நிமித்தமாக நடந்தது. அவருடைய குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக வந்திருந்தார். அவருடன் அரசியல் பேசவில்லை. சீக்கிரம் இன்னும் கொஞ்ச நாளில் நிலைப்பாட்டை அறிவிப்போம். அதுவரை தேவையில்லாமல் வதந்தி கிளப்பாதீர்கள் என்றார் டாக்டர் அன்புமணி.