இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த சீட்.. இன்று மாலை முடிவு செய்கிறது திமுக.. கேட்டது கிடைக்குமா?

Manjula Devi
Mar 11, 2024,12:49 PM IST

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்கனவே இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு தொகுதிகள் எது என்பதை அடையாளம் காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மாலை  அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை பணிகளை முடித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஎம், கொங்கு தேசிய மக்கள் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 




இதில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக  காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி உள்ளது. மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக மற்றும் கொமதேக ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஏற்கனவே தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் 2 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.


இந்த நிலையில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகள்  எது என்பதை உறுதி  செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதைத்த தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொகுதிகள் இறுதி செய்யப்படும். தொகுதிகள் இன்னும் முடிவு செய்யப்படாத பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிகள் ஒதுக்கீடு நடைபெறவுள்ளது.