பாய வரும் முரட்டுக்காளைகள்.. சென்னையில் ஜல்லிக்கட்டு.. மார்ச் 5ல்... திமுக சார்பில்!

Su.tha Arivalagan
Jan 11, 2023,01:43 PM IST
சென்னை: சென்னையில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த திமுக முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.



தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா களை கட்டியுள்ளது. பல்வேறு ஊரக விளையாட்டுக்கள் ஊரெங்கும் நடந்து வருகின்றன. கூடவே ஜல்லிக்கட்டும் தொடங்கியுள்ளது. தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது. அடுத்து அவனியாபுரத்தில் 15ம் தேதியும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

அதேபோல சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மெரீனா கடற்கரையில் அதை நடத்த விருப்பமும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது திமுக சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை படப்பை கரசங்கால் பகுதியில் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியானது மார்ச் 5ம் தேதி நடத்தப்படும். வடக்கு மாவடட் திமுக இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் இப்போட்டி பிரமாண்டமாக நடைபெறும். 500க்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொள்ளும். அதில் ஒரு காளையின் பெயர் ஸ்டாலின் என்பதாகும். அனைத்து வித விதிமுறைகள், பாதுகாப்புகளுக்கு உட்பட்டு இப்போட்டி நடத்தப்படும்.

மாடு பிடி வீரர்களுக்கு பல்வேறு பிரமாண்ட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இதைக் காண வருவார்கள் என்று நம்புகிறோம். அதற்கேற்ப ஏற்பாடுகளும் நடைபெறவுள்ளன என்றார் அமைச்சர் தா. மோ.அன்பரசன்.

அமைச்சரே படப்பையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறி விட்டதால், கமல்ஹாசன் விரும்பியபடி மெரீனாவில் இந்த  நிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மங்கிப் போய் விட்டதாக கருதப்படுகிறது.