கருணாநிதி நூற்றாண்டு விழா.. இந்தியாவே திரும்பி பார்க்க வேண்டும்.. திமுக மா. செ.க்கள் தீர்மானம்!

Baluchamy
Mar 22, 2023,02:20 PM IST

சென்னை:  இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற வேண்டும் என திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75 மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.




திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில், வரும் ஜூன் 3ம் நாள் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. கலைஞர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் தயாளு அம்மாள் சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கின்றனர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மேலும் தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களும், மாலையில் அகில இந்தியா தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் ஜூன் 3ம் நாள் நடைபெறும் இந்த நுற்றாண்டுவிழா அடுத்த ஆண்டு ஜூன் 3ம் நாள் வரை கோலாகலமாக கொண்டாடவேண்டும் என்றும் இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.