தமிழ்நாடு முழுவதும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக.. மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி போராட்டம்!

Manjula Devi
Feb 25, 2025,06:30 PM IST

சென்னை: புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பை வலியுறுத்தும் மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவர் அணி மற்றும் திமுகவினர் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.


தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 


அதே சமயத்தில், திமுக மாணவர் அணி சார்பில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, மருத்துவம், போன்ற எல்லா துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அரசு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மாநில அமைப்பாளர் கூட்டத்தில் திமுக மாணவர் அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.




இந்த நிலையில், இன்று மாவட்டந்தோறும் மாணவ அமைப்பினர் மற்றும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னை ஆலந்தூரில் உள்ள மத்திய அரசு வைத்த பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி வாக்கியத்தை கருப்பு மை கொண்டு அழித்தனர். இந்தியா போஸ்ட், தொலை தொடர்பு சேவை மையம் போன்ற இடங்களில் பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த இந்த வாக்கியத்தை அளித்து தமிழ் வாழ்க.. தமிழர் வாழ்க.. ஹிந்தி ஒழிக என்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதேபோல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுகவினர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். ‌ இதில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக மக்களுக்கு துண்டு பிரசுரங்களை கொடுத்து  போராட்டம் நடத்தினர்.


கடலூர், தேவனாம்பட்டி அரசு பெரியார் கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இந்தி திணிப்பை எதிர்த்து, மத்திய அரசு தர மறுக்கும் நிதியை கேட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


 கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் ஹிந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களை துண்டு பிரசுரங்களை மக்களுக்கு அளித்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த அனைத்து இந்தி  வாக்கியங்களையும் கருப்பு மை பூசி அளித்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.