அம்பேத்கர் பெயரால் சதிநாடகங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.. முரசொலி அட்டாக்

Su.tha Arivalagan
Dec 09, 2024,05:45 PM IST

சென்னை:  இன்றைக்கு அம்பேத்கர் பெயரால் சதிநாடகங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். மனுவின் பெயரால் மக்களை இழிமக்களாக்கி, எதிர்காலத்திலும் அப்படி ஆக்க நினைக்கும் ஒரு கூட்டம் அம்பேத்கரைக் கொண்டாடுவது அருவருப்பானது ஆகும். அம்பேத்கரைப் போற்றுகிறோம் என்ற முகமுடிக்குப் பின்னால் திராவிட மாடல் ஆட்சியைத் தூற்றுவதுதான் அவர்களது உண்மையான நோக்கமாக இருக்கிறது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலி கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதியுள்ளது.


முரசொலியின் இன்றைய தலையங்கம் வருமாறு:




தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் அவர்கள் என்றும் அவரால் தான் பஞ்சமர்கள், கட்சியர்கள் ஆகியோரின் இழிபிறப்பு என்கிற கொடுமைகளும் நீங்குமென்று நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். என்னைப் போலவே அவரும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் நோய்க்கு மருந்து சொன்னார். அதனாலேயே நாங்கள் சிறந்த நண்பர்களானோம்.


அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் பிரச்சாரம் செய்தேன்.அவருடைய கருத்தை நீங்கள் தழுவினாலொழிய உங்கள் குறையும் இழிவும் நீங்காது என்று சொல்கின்றேன்" -என்று 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் உரையாற்றும் போது தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள்.


பரப்புரை செய்த இயக்கம் மட்டுமல்ல திராவிட இயக்கம். அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைச் செயல்படுத்தும் இயக்கமாகவும் திராவிட முன்னேற்றக் கழக அரசுகள் செயல்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இன்றைய 'திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு, அண்ணலின் சிந்தனைகளை முழுமையாகச் செயல்படுத்தும் அரசாக அமைந்துள்ளது.


கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளின் போது நடைபெற்ற விழாவானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உன்னதமான எதிர்காலத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்திருந்தது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டமானது 2023 ஆம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர்களுக்காக தொடங்கப்பட்ட தொழில் திட்டம் இது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கிக் கொண்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.


இத்திட்டத்திற்கான தொழில்முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும் 65 சதவீதத் தொகையை வங்கிக் கடனாகவும் தரப்படுகிறது. இத்திட்டத்தின் படி 2,136 ஆதிதிராவிடர்க்கு வங்கி கடன்கள் தரப்பட்டுள்ளன. அவர்களில் தகுதியானவர்களான 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 238 மகளிர் தொழில்முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர். இதுதான் அண்ணல் அம்பேத்கர் காணவிரும்பிய சமநிலைச் சமுதாயம் ஆகும்.


மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் செயலை முதலமைச்சர் அவர்கள் செய்து வருகிறார்கள். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையினை மாற்றி இப்பணிகளை இயந்திர மயம் ஆக்கி வருகிறார்கள். சென்னை குடிநீர் வடிகால் வாரியமும், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்க அமைப்பும் இணைந்து ஒரு திட்டதை உருவாக்கினார்கள். இத்திட்டமானது 2023 ஆம் ஆண்டு கையெழுத்தானது. தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவுநீர் அகற்றும் வாகனங்களும் இயந்திரங்களும் வழங்கி அவர்களையும் உரிமையாளர்களாக ஆக்கி உள்ளது தி.மு.க. அரசு. 50 விழுக்காடு மானியமாகத் தரப்படுகிறது. மாதம் ரூ.50 ஆயிரம் அவர்களுக்கு கிடைக்கும். இந்தக் குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


எல்லோர்க்கும் எல்லாம் என்பதைத் திராவிடக் கருத்தியலாகச் சொல்லி வரும் முதலமைச்சர் அவர்கள், 'அனைத்து சமூக வளர்ச்சி' என்பதையும் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். அதனடிப்படையில் இத்திட்டமானது தீட்டப்பட்டுள்ளது. சமூகநீதியை வாயளவில் பேசாமல், செயலளவில் செயல்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு.


ஆனால் இன்றைக்கு அம்பேத்கர் பெயரால் சதிநாடகங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். மனுவின் பெயரால் மக்களை இழிமக்களாக்கி, எதிர்காலத்திலும் அப்படி ஆக்க நினைக்கும் ஒரு கூட்டம் அம்பேத்கரைக் கொண்டாடுவது அருவருப்பானது ஆகும். அம்பேத்கரைப் போற்றுகிறோம் என்ற முகமுடிக்குப் பின்னால் திராவிட மாடல் ஆட்சியைத் தூற்றுவதுதான் அவர்களது உண்மையான நோக்கமாக இருக்கிறது. பட்டியலின மக்களுக்கான கொடுமைகள் அதிகம் நடப்பதாக இம்மாநிலத்துக்கு ஆளுநராக வந்திருப்பவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது. சில தற்குறிகள் ஒரு பக்கம் உளறிக் கொண்டிருப்பது பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் ஆளுநர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, வாய்க்கு வந்ததை 'மைக்'கும் மேடையும் கிடைத்து விட்டது என்பதற்காக உளறக் கூடாது.


தி.மு.க.வுக்கு சமூகநீதியைப் பற்றியோ, அம்பேத்கரைப் பற்றியோ வகுப்பெடுக்கும் அருகதை எவருக்கும் இல்லை. சுயமரியாதை இயக்க காலம் தொட்டு அண்ணல் அம்பேத்கரைப் போற்றிய இயக்கம் திராவிட இயக்கம். அம்பேத்கர் என்ற பெயரை, எப்படி மொழி பெயர்த்து எழுதுவது என்று தெரியாத காலத்தில் 'ஆம்போத்கார்' என்று எழுதி அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த இயக்கம் திராவிட இயக்கம். அம்பேத்கரால் பேசுவதற்கு மறுக்கப்பட்ட உரையை 30 ஆண்டுகளுக்கு முன்னால் 'சாதியை ஒழிக்க வழி' என்று தமிழ்ப்படுத்தி வெளியிட்ட இயக்கம்.


52 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் தொடங்கப்பட்ட கல்லூரிக்கு அம்பேத்கர் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். அம்பேத்கர் பிறந்த மண்ணில் மராத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அவரது பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. 1989 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயரையும், சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயரையும் வைத்தவர் தலைவர் கலைஞர்.


இவை அனைத்துக்கும் மேலாக அண்ணல் பிறந்த நாளை 'சமத்துவ நாளாக' அறிவித்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டும்தான். அன்றைய தினம் அனைத்து மக்களையும் சமத்துவ உறுதிமொழி எடுக்க வைத்தவர் திராவிட நாயகன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இதை எல்லாம் ஜீரணிக்க முடியாத சக்திகள், 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பதைப் போல புதிதாக இப்போதுதான் அம்பேத்கரை எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் வகுப்பெடுப்பதுதான் சந்தி சிரிக்க வைக்கிறது என்று கூறியுள்ளது முரசொலி.


சமீபத்தில் சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவின் போது தவெக தலைவர் விஜய் அம்பேத்கர் குறித்தும் பேசியிருந்தார். திமுகைவயும் கடுமையாக சாடியிருந்தார். அதற்கும் சேர்த்தே இந்த தலையங்கம் மூலம் திமுக பதிலடி கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்