நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு.. தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.. திமுக எம்.பி. பி.வில்சன்
டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார்..
அவர் கொண்டுவந்துள்ள மசோதாவில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக இதைக் கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது , மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவை தான் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதாக எம்.பி. பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் நியமன இட ஒதுக்கீடு தொடர்பான தனி நபர் மசோதாவில் என்ன இருக்கிறது?
- உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த மசோதா வலியுறுத்துகிறது.
- உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சி செய்கிறது.
- சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும் எனவும் இது ஒரு ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
- அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை (உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்) மட்டுமே என்றும், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்