பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு.. மத்திய அரசை எதிர்த்து.. திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

Manjula Devi
Jul 27, 2024,11:54 AM IST

சென்னை:   மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பட்டதைக் கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


2024- 25 ஆம் நிதியாண்டிற்க்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ஏழாவது முறையாக தாக்கல் செய்தார். இதில் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு மட்டும் ஏராளமான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு மற்றும் சலுகைகள்  வழங்கப்படுவது தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. 




இதனை கண்டித்து ராகுல் காந்தி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது இந்தியாவிற்கான பட்ஜெட் கிடையாது, பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் என கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்படும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் அறிவித்தனர்.


இந்த நிலையில்பாஜக அரசை கண்டித்து ஜூலை 27ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி இன்று இப்போராட்டம் நடைபெற்றது. சென்னையில் இரண்டு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக முன்பு நடந்த போராட்டத்தில், எம்.பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற  உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர். இவர்களுடன் ஏராளமான திமுக தொண்டர்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிரான பதாகிகளை ஏந்தி முழக்கமிட்டனர்.


அதேபோல் சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், திரளானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை நடத்தினர். இதேபோல தமிழ்நாடு முழுவதும்  திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.