பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும், தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், உள்ளாட்சித்துறைக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
சாலையோரங்களில் அரசியல் கட்சிகள், ஜாதி மத அமைப்பினர் உள்ளிட்டோர் கொடிக் கம்பங்களை வைக்க அனுமதி இல்லை என்றும், அப்படிச் செய்வதை ஜனநாயக உரிமையாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் சாலையோரங்கள், பொது இடங்களில் தற்போது குவியல் குவியலாக நிற்கும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு கட்சிகளும், அமைப்புகளும் தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திமுகவினர் தாங்களாக முன்வந்து கொடிக் கம்பங்களை அகற்றுமாறு அக்கட்சியினருக்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்கள் சாதி மத ரீதியிலான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது.
அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்த தீர்ப்பு கடந்த 6.3.2025 அன்று உறுதி செய்யப்பட்டது. எனவே மாவட்ட நகர பகுதி பேரூர் வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இட ங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழக கொடி கம்பங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழக கொடிக்கம்பங்களின் விவரங்களை தலைமை கழகத்திற்கு தெரியப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொடிக்கம்பங்கள் என்பது கட்சிகளின் பலத்தை காட்ட ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பட்டி தொட்டியெங்கும் கட்சிக் கொடிகளைப் பறக்க விடுவதன் மூலம் தங்களது இருப்பை நிலை நாட்டவும் கட்சிகள் இதை ஒரு வழியாக பயன்படுத்துகின்றன. அதேசமயம், கட்சிக் கொடிக் கம்பங்களால் பல பிரச்சினைகளும் நிலவுகின்றன. இந்த நிலையில்தான் உயர்நீதிமன்ற உத்தரவு கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்துள்ளது.